சம்பளம் தவிர ஒவ்வொரு போட்டியிலும் லட்சத்தை அசால்ட்டாக வாங்கும் இளம் வீரர் – பாராட்டுடன் கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்ற 21-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் குஜராத்தை தோற்கடித்த ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 162/7 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அதிக பட்சமாக போராட்டமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 42 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 50* ரன்களை விளாசினார். அவருக்கு உறுதுணையாக அபினவ் மோனோகர் 35 (31) ரன்களை அடிக்க ஐதராபாத் சார்பில் பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர் நடராஜன் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

- Advertisement -

மீண்டெழுந்த ஹைதெராபாத்:
அதை தொடர்ந்து 163 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்க்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். இந்த ஜோடியில் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 6 பவுண்டரி உட்பட 42 ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்து களமிறங்கிய ராகுல் திரிப்பாதி அதிரடியாக 17 (11) ரன்கள் எடுத்திருந்த போது காயமடைந்ததால் வேறு வழியின்றி பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த வில்லியம்சன் 46 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 34* ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிப் பிடித்த ஹைதராபாத் தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

அசத்தும் உம்ரான் மாலிக்:
முன்னதாக இந்த போட்டியில் ஹைதராபாத் சார்பில் கலக்கலாக பந்து வீசிய இளம் வீரர் உம்ரான் மாலிக் 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். அதைவிட இந்த போட்டியில் அவர் வீசிய அதிவேகமான பந்துகளை பார்த்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வாயடைத்துப் போய் வருகிறார்கள். ஏனெனில் முதல் பந்திலேயே 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசத் தொடங்கும் அவர் 2-வது ஓவர்களின் போது 150 கிலோ மீட்டர் வேகப் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துகிறார். அதிலும் நேற்றைய போட்டியில் அதிகபட்சமாக 153.3 கீ.மீ வேகப்பந்தை வீசி ஐபிஎல் 2022 தொடரில் அதிவேகமான பந்துவீசிய பவுலராக சாதனை படைத்தார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இவர் கடந்த வருடம் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி இதேபோல அதிவேகமான பந்துகளை வீசி விராட் கோலி உள்ளிட்ட பலரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளைப் பெற்றார். அதன் காரணமாக இந்தியாவிற்காக விளையாடாத போதிலும் 4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு தக்கவைத்த ஹைதராபாத் அணி நிர்வாகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த வகையில் இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஐதராபாத் அணியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

புது ட்ரெண்ட்:
முன்னதாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி போன்றவைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வருடம் நடைபெறும் ஒவ்வொரு போட்டியிலும் அதிவேகமான பந்து வீசும் பவுலரை உற்சாகப் படுத்தும் வகையில் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி பெயரில் ஒரு புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “ஸ்விக்கி பாஸ்ட்டஸ்ட் டெலிவரி ஆஃப் தி மேட்ச்” என்ற பெயரில் வழங்கப்படும் அந்த விருதை நேற்றைய போட்டியில் 153 கீ.மீ வேகப் பந்து வீசிய உம்ரான் மாலிக் தட்டிச் சென்றார். அதற்காக வழங்கப்படும் 1 லட்சம் ரூபாயையும் அவர் பெற்றார்.

இதில் ஆச்சரியம் என்னவெனில் சாதாரணமாகவே அதிவேகமான மின்னல் வேக பந்துகளை வீசும் அவர் ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அதிவேகமான பந்தை வீசியதால் 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக இந்த விருதை வென்று 4 லட்சத்தை வென்றுள்ளார். அதாவது இதுவரை அவர் பங்கேற்ற 4 போட்டிகளிலும் விக்கெட் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் ஹைதராபாத் ஜெயித்தாலும் தோற்றாலும் அதிவேகமான பந்துகளை வீசி 4 லட்சத்தை அசால்டாக வென்றுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வியந்து போய் அவரை பாராட்டுவதுடன் கலாய்த்தும் வருகிறார்கள்.

இதையும் படிங்க : கேப்டன்ஷிப்னா என்னானு தெரியுமா? இந்திய வீரரை கெட்ட வார்த்தையால் திட்டிய பாண்டியா – ரசிகர்கள் கோபம்

அதிலும் ஏற்கனவே 4 கோடி சம்பளத்தை பெறும் அவர் ஒவ்வொரு போட்டியிலும் பாக்கெட் மணியாக 1 லட்சத்தை வெல்கிறார் என்றும் அந்த விருதுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்யும் ஸ்விக்கி நிறுவனத்திற்கு இந்த வருடம் முடிவதற்குள் அவர் பிராண்ட் அம்பாசிடராக மாறிவிடுவார் என்று வகைவகையாக ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement