
மிகுந்த விறுவிறுப்பான ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற 30-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தாவை ராஜஸ்தான் எதிர்கொண்டது. மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 217/5 ரன்களை குவித்தது. இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான அடித்தளமிட்டனர்.
இதில் ஒருபுறம் பட்லர் அதிரடியாக பேட்டிங் செய்ய மறுபுறம் அவருக்கு உறுதுணையாக நின்ற படிக்கல் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 24 (18) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நல்ல தொடக்கத்தை வீணாக்காத கேப்டன் சஞ்சு சாம்சன் அடுத்ததாக களமிறங்கி தனது பங்கிற்கு வெறும் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (19) ரன்கள் விளாசி அவுட்டானார்.
பட்லர் 2-வது சதம்:
மறுபுறம் தொடர்ந்து கொல்கத்தா பவுலர்களை புரட்டி எடுத்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஜோஸ் பட்லர் தனது அதிரடி பேட்டிங்கை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வெறும் 61 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சர் உட்பட சதமடித்து 103 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இது இந்த வருடம் அவர் அடிக்கும் 2-வது சதமாகும். இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 26* (13) ரன்கள் எடுத்து அதிரடி பினிஷிங் கொடுக்க கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சுனில் நரேன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து 218 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு முதல் பந்திலேயே சுனில் நரேன் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் பின்ச் உடன் இணைந்து அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 2-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 9 ஓவர்களிலேயே இவ்வளவு ரன்களை மிரட்டலாக சேர்த்த இந்த ஜோடியில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 58 (28) ரன்கள் எடுத்த ஆரோன் பின்ச் ஆட்டமிழக்க அடுத்து வந்த நிதிஷ் ராணா 18 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
போராடிய ஷ்ரேயஸ், மிரட்டிய சஹால்:
போதாக்குறைக்கு அந்த அணி பெரிதும் நம்பியிருக்கும் ஆண்ட்ரே ரசல் அடுத்ததாக களமிறங்கிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட அரைசதம் கடந்து 85 (51) ரன்கள் எடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வெற்றிக்காக போராடியதால் கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 40 ரன்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவியது.
அப்போது 17-வது ஓவரை வீசுவதற்கு பந்தை கையில் எடுத்த நட்சத்திர வீரர் யுஸ்வென்ற சஹால் முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயரை 6 (7) ரன்களில் காலி செய்து 4-வது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயரை 85 ரன்களில் அவுட் செய்ததோடு நிற்காமல் 5-வது பந்தில் ஷிவம் மாவி, 6-வது பந்தில் பட் கமின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து அவுட் செய்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். இதனால் சரிந்த கொல்கத்தாவை கடைசி நேரத்தில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 (9) ரன்கள் விளாசி தூக்கி நிறுத்த முயன்ற உமேஷ் யாதவும் கடைசி ஓவரில் அவுட்டானதால் 19.4 ஓவர்களில் 210 ரன்களை மட்டுமே எடுத்த அந்த அணி போராடி தோல்வி அடைந்தது.
மிரட்டும் பட்லர்:
மறுபுறம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முக்கிய நேரங்களில் கலக்கிய ராஜஸ்தான் வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்து இந்த வருடம் 4-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. இந்த பரபரப்பான வெற்றிக்கு ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகள் எடுத்த சஹால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்ட போதிலும் சதமடித்த ஜோஸ் பட்லர் அறிவிக்கப்படாத ஆட்ட நாயகனாக திகழ்ந்தார்.
1. இந்த போட்டி மட்டுமல்லாது மும்பைக்கு எதிரான போட்டியிலும் சதமடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் 1க்கும் மேற்பட்ட சதங்களை அடித்த 6-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன் கிறிஸ் கெயில் (2011), விராட் கோலி (2016), ஹாசிம் அம்லா (2017), ஷேன் வாட்சன் (2018), ஷிகர் தவான் (2020) ஆகியோரும் இந்த சாதனை படைத்துள்ளனர்.
2. மேலும் 2 சதங்கள் 2 அரை சதங்கள் உட்பட 375* ரன்களை 75.00 என்ற அற்புதமான சராசரியில் குவித்துள்ள அவர் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். 2-வது இடத்தில் ஷ்ரேயஸ் ஐயர் 236 ரன்களுடன் உள்ளார்.
3. இப்படி அடுத்தடுத்த சதங்களுடன் முரட்டுத்தனமான பார்மில் எதிரணிகளை புரட்டியெடுத்து அவர் போகும் போக்கைப் பார்க்கும் ரசிகர்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு விஸ்வரூபம் எடுத்து 973 ரன்கள் விளாசி ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனை படைத்த விராட் கோலியின் நியாபகம் வருகிறது.
4. அதிலும் இப்படியே விளையாடினால் கண்டிப்பாக விராட் கோலியின் சாதனையை ஜோஸ் பட்லர் உடைத்து விடுவார் என்று பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
5. அதற்கேற்றார் போல் கடந்த மே மாதம் 2021 வரை ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த அவர் அதன்பின் துபாயில் நடந்த ஐபிஎல் 2-வது பாகத்தில் முதல்முறையாக சதமடித்து அதன்பின் நடந்த டி20 உலக கோப்பையில் சதமடித்து இப்போது 2 சதங்கள் அடித்துள்ளார். அதாவது 12 மாதங்களுக்குள் 4 சதங்களை அடித்து முரட்டுத்தனமான பார்மில் உள்ளார் என்பதால் விராட் கோலியின் சாதனையை உடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.