
2022 ஆசிய கோப்பையில் ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 4வது லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்ட இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 192/2 ரன்கள் குவித்தது. 2 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியை தொடக்கிய கேப்டன் ரோகித் சர்மா 21 (13) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் களமிறங்கிய கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடி 36 (39) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய விராட் கோலி 1 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் அடித்து 59* (43) ரன்கள் விளாசினார்.
அவருடன் ஜோடி சேர்ந்து அவரை விட அட்டகாசமாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் மைதானத்தில் நாலாபுறமும் சுழன்றடித்து 6 பவுண்டரி 6 சிக்சர்கள் 68* (26) ரன்களை விளாசி சூப்பரான பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 193 ரன்களை துரத்திய ஹாங்காங் அணிக்கு தொடக்க வீரர்கள் முர்த்தசா 9, கேப்டன் நிஜாகத் கான் 10 என சொற்ப ரன்களில் அவுட்டாக மிடில் ஆர்டரில் போராடிய பாபர் ஹயாத் அதிகபட்சமாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 41 (35) ரன்களும் கிஞ்சிட் ஷா 30 (28) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மிரட்டிய ஸ்கை:
இறுதியில் ஐசாஸ் கான் 14, ஜீசன் அலி 26* (17), மெக்கன்சி 16* (8) போன்ற வீரர்கள் போராடிய போதிலும் 20 ஓவர்களில் அந்த அணி 152/5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் வென்றிருந்த இந்தியா இந்த வெற்றியால் குரூப் பி பிரிவின் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு 68* ரன்களை குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நேற்றைய போட்டியில் அவரது பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள். ஏனெனில் ஹாங்காங் பவுலர்கள் என்றாலும் அவர்களுக்கு எதிராக ராகுல், ரோகித், விராட் கோலி ஆகியோரால் 200 ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை எடுக்க முடியவில்லை. ஆனால் நல்ல பார்மில் இருக்கும் இவர் 261.54 என்ற தெறிக்கவிடும் ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.
குறிப்பாக கடைசி ஓவரில் 4 சிக்சருடன் 26 ரன்களை தெறிக்கவிட்ட அவர் மொத்தமாக எடுத்த 68* ரன்களில் 60 ரன்களை பவுண்டரிகளின் வாயிலா மட்டுமே சேர்த்தார். அந்தளவுக்கு அட்டகாசமாக பேட்டிங் செய்து அவரை எதிர்ப்புறமிருந்து பார்த்த விராட் கோலி வியப்படைந்து இன்னிங்ஸ் முடிந்ததும் பெவலியனுக்கு திரும்புவதற்கு முன்பாக அவர் அருகில் வரும் வரை காத்திருந்து தலை வணங்கியது மட்டுமல்லாமல் “என்னா மனிதர், இப்படி அடிக்கிறார்” என்ற வகையில் வியந்து பாராட்டியதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.
சூரியா பெருமிதம்:
ஏனெனில் சூரியகுமாரை விட தாம் அனைத்து வகைகளிலும் சிறந்த பேட்ஸ்மென் என்பதையும் தாண்டி அவரது திறமையைப் தலைவணங்கி விராட் கோலி பாராட்டியது முதல் வியப்பாகும். மற்றொன்று கடந்த 2020 ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் இதேபோல் வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் சிம்மசொப்பனமாக நின்று வெற்றி பெற வைத்தார். அப்போது “நான் இருக்கிறேன்” என்ற வகையில் வெற்றி பெற்ற பின் அவர் செய்த செய்கைக்கு விராட் கோலி முறைத்ததை யாராலும் மறந்திருக்க முடியாது.
அதை நினைத்து பார்க்கும் ரசிகர்கள் அந்த விராட் கோலியா இது என்று சமூக வலைதளங்களில் வியப்பை வெளிப்படுத்துகின்றனர். இதுபற்றி போட்டி முடிந்த பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சூரியகுமார் மனமுருகி பதிலளித்தது இதோ. “அது விராட் கோலியின் நெஞ்சைத் தொடும் செயலாகும். ஏனெனில் இதற்கு முன் அதை நான் பார்த்ததில்லை. போட்டி முடிந்ததும் அவர் முன் கூட்டியே செல்லாமல் எனக்காக காத்திருந்து இணைந்து செல்வோம் என்று என்னிடம் கூறினார்”
“அவர் ஏகப்பட்ட அனுபவத்தை கொண்டவர். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவருடன் பேட்டிங் செய்வது முக்கியமானதாகும். அது விராட் கோலியிடமிருந்து கிடைத்த நெஞ்சை தொடும் பாராட்டாகும். அவர் என்னை விட அனுபவம் வாய்ந்தவர். அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக இணைந்து பேட்டிங் செய்தேன். அடுத்த பந்துகளை எவ்வாறு அடிக்க வேண்டும் என்று நாங்கள் விவாதித்து விளையாடினோம். அவர் விளையாடிய டி20 போட்டிகள் அளவுக்கு நான் விளையாடியதில்லை”
“எனவே அவரைப் போன்ற ஒருவருடன் விளையாடுவது முக்கியமானதாகும். நான் களமிறங்கிய போது அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் அப்போது பிட்ச் மெதுவாக இருந்ததால் விராட் கோலியிடம் பேசினேன். அவர் நீங்கள் எப்போதும் விளையாடுவதை போல் விளையாடுங்கள் என்று ஊக்கமளித்தார். மேலும் அணிக்காக நான் எந்த இடத்திலும் விளையாட தயாராக உள்ளேன்” என்று கூறினார்.