ஒரு சூறாவளி கிளம்பியதே, ரோஹித் தாண்டவம் தொடங்கியதே – உற்சாகத்தில் ஹிட்மேன் ரசிகர்கள், நடந்தது என்ன?

Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையையில் செமி ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்து மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் விளையாடுகின்றனர். முன்னதாக நடைபெற்ற உலகக் கோப்பையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா தலைமையில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக களமிறங்கியதால் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்து ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

குறிப்பாக கேப்டனாக பொறுப்புடன் செயல்பட வேண்டிய ரோஹித் சர்மா அதிரடி காட்ட வேண்டிய ஓப்பனிங் பேட்டிங் இடத்தில் பெரும்பாலான போட்டிகளில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் செமி ஃபைனலில் இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாத அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப்பும் சுமாராக இருந்தது. முன்னதாக இருதரப்பு தொடர்களை வென்ற விராட் கோலி உலக கோப்பையை வெல்லவில்லை என்ற விமர்சனத்தை சந்தித்து கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகிய போது 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றார்.

- Advertisement -

சூறாவளி கிளம்பியதே:
அவரது தலைமையில் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா அழுத்தமான ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் வழக்கமான தோல்விகளை சந்தித்தது. மேலும் தொடர்ந்து அணியுடன் இருக்க வேண்டிய அவர் கேப்டனாக பொறுப்பேற்ற கடந்த ஒரு வருடத்திற்குள் பணிச்சுமை என்ற பெயரில் பெரும்பாலான தொடர்களில் ஓய்வெடுத்து வருகிறார். அதனால் வரலாற்றிலேயே இந்த வருடம் முதல் முறையாக 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவல நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது.

அதன் காரணமாக இவருக்கு விராட் கோலியே பரவாயில்லை என்று ரசிகர்கள் பேசும் நிலையில் 35 வயதை கடந்து விட்ட ரோகித் சர்மாவுக்கு பதிலாக வரும் காலத்தில் புதிய கேப்டன்களை நியமிப்பதற்கான வேலைகளை டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்து ஏற்கனவே பிசிசிஐ மறைமுகமாக துவக்கியுள்ளது. இந்நிலையில் அணியிலிருந்தும் கேப்டன் பதவியிலிருந்தும் நீக்குமாறு விமர்சனங்களை சந்தித்துள்ள ரோகித் சர்மா அடுத்ததாக வரும் டிசம்பர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கான பயிற்சிகளை துவக்கியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியதும் சில நாள் ஓய்வுக்கு பின் மும்பையில் தீவிரமான பயிற்சிகளை துவங்கியுள்ள அவர் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக சுமாரான ஃபிட்னெஸ் மெயின்டன் செய்வதாக விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் உடல் எடையை குறைத்து தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொண்டு பழைய ஹிட்மேனாக திரும்புவதற்காக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் இது போன்ற சரிவு சகஜமானதாகும். ஆனால் அதிலிருந்து கடினமாக உழைத்து மீண்டெழுவதே முக்கியமாகும். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக உலக அளவில் விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி மனம் தளராமல் போராடி தற்போது விமர்சித்த வாய்களை பாராட்ட வைத்துள்ளார்.

- Advertisement -

அந்த வரிசையில் ரோகித் சர்மாவும் கடினமாக உழைக்க துவங்கியுள்ளதைப் பார்க்கும் அவரது ரசிகர்கள் “ஹிட்மேன் முடிந்து விடவில்லை. மீண்டும் வருவார்” என்ற வகையில் சமூக வலைதளங்களில் அந்தப் புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதை பார்க்கும் போது “சூறாவளி கிளம்பியதே, ரோகித் தாண்டவம் தொடங்கியததே” என்ற பாடல் வரிகள் தான் நமக்கும் நினைவுக்கு வருகிறது.

இதையும் படிங்க : விராட் கோலி, சங்கக்காரா வரலாற்று சாதனையை சமன் செய்த ஜெகதீசன் – மீண்டும் சென்னைக்கு பதிலடி

மொத்தத்தில் தீவிரமான பயிற்சிகளை மேற்கொள்ளும் ரோகித் சர்மா அடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடரில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரன்களை குவித்து கேப்டனாக இந்தியாவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அழைத்துச் சென்று கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Advertisement