ஒரே போட்டியில் ஜாம்பவான்கள் சேவாக் – டிராவிட்க்கு டஃப் கொடுத்த 2 இளம் வீரர்கள் – ரஞ்சி கோப்பை ருசிகரம்

Yashasvi Jaiswal 1 Run On 54th Ball In Ranji Trophy
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரின் லீக் சுற்றில் 38 அணிகள் பங்கேற்ற நிலையில் 8 அணிகள் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 6இல் துவங்கிய காலிறுதிப் போட்டிகளில் மும்பை, உத்தரப்பிரதேசம், பெங்கால், மத்தியப்பிரதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் பெங்களூருவில் கடந்த ஜூன் 14இல் துவங்கிய அரையிறுதி சுற்றின் 2-வது அரையிறுதிப் போட்டியில் 41 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சரித்திரம் படைத்துள்ள மும்பையை உத்தரப்பிரதேசம் எதிர்கொண்டது.

அப்போட்டியில் டாஸ் வென்ற உத்தரப்பிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பை தனது முதல் இன்னிங்சில் 393 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக இளம் தொடக்க வீரர் யஷஎஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து 100 ரன்களும் ஹர்டிக் டாமோர் சதமடித்து 115 ரன்களும் எடுத்தனர். உத்திரபிரதேசம் சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் கேப்டன் கரண் சர்மா 4 விக்கெட்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய உத்தரபிரதேசம் மும்பையின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 180 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மாதவ் கவுசிக் 38 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

எரிமலை ஷா:
அதனால் 213 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை தனது 2-வது இன்னிங்ஸில் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 156/1 என்ற நிலையுடன் 369 ரன்கள் மொத்தமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இப்போட்டியில் 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பைக்கு தொடக்க வீரர்களாக இளம் இந்திய வீரர்கள் கேப்டன் பிரிதிவி ஷா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். பொதுவாகவே சூழ்நிலைக்கு ஏற்றார்போல் நிதானம், அதிரடி என 2 வகைகளிலும் ஆட தெரிந்தவர்கள் நேற்றைய போட்டியில் ஒருவருக்கொருவர் வித்தியாசமாக பேட்டிங் செய்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஆம் டெஸ்ட் போட்டி என்றும் கூட பாராமல் முதல் ஓவரிலிருந்தே உத்தரப்பிரதேச பவுலர்களை வெளுத்து வாங்கிய பிரிதிவி ஷா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு சரவெடியாக ரன்களை சேர்த்தார். ஆனால் மறுபுறம் அவருக்கு கை கொடுக்கும் வகையில் அனைத்து பந்துகளையும் தடுத்து நிறுத்திய ஜெய்ஸ்வால் ஒரு ரன் கூட எடுக்காமல் பாறையைப் போல் நின்றார். ஒரு கட்டத்தில் மும்பை விக்கெட்டை இழக்காமல் 51/0 ரன்களை கடந்தது. அதில் எரிமலையாக பேட்டிங் செய்த பிரிதிவி ஷா மட்டும் 10 பவுண்டரியுடன் 50* (56) ரன்களை விளாசி ரசிகர்களை அதிர விட்டார்.

- Advertisement -

சந்தமாய் ஜெய்ஸ்வால்:
அடுத்த சில ஓவர்களில் மும்பை 61/0 ரன்கள் எடுத்திருந்த போது அதில் பிரிதிவி ஷா மட்டும் 60* (64) ரன்களை எடுத்தார். ஆனால் மறுபுறம் பொறுமையின் சிகரமாக நின்ற ஜெய்ஸ்வால் 50 பந்துகளை சந்தித்து 1 ரன் கூட எடுக்காமல் இருந்தது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. இறுதிவரை மும்பை எடுத்த 66 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் பிரிதிவி ஷா மட்டும் 12 பவுண்டரிகள் உட்பட 64 (71) ரன்களை தெறிக்கவிட்டு ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான பின் ஒரு வழியாக மனமிறங்கிய ஜெய்ஸ்வால் இனிமேல் ரன்கள் எடுக்கலாம் என்ற எண்ணத்துடன் சந்தித்த 54-வது பந்தில் பவுண்டரியை அடித்து முதல் ரன்னை எடுத்தார்.

அப்போது “அப்பாடா ஒரு வழியாக ரன்கள் எடுத்து விட்டார்” என்ற வகையில் எதிரணியினரான உத்திரப்பிரதேச அணி வீரர்களே அவரைப் பாராட்டி கலகலப்புடன் கைதட்டினார்கள். அதற்கு அவரும் சதமடித்தது போல் பேட்டை உயர்த்தி காட்டினார். இறுதியில் 4-வது நாள் முடிவில் ஜெய்ஸ்வால் 51* (153) ரன்களும் அர்மன் ஜாபர் 44* (90) ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

சேவாக் – டிராவிட்:
மொத்தத்தில் நேற்றைய போட்டியில் இந்த 2 இளம் இந்திய வீரர்களின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்களுக்கு 2 முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர்கள்தான் சட்டென நினைவுக்கு வந்தார்கள். ஆம் சந்தித்த முதல் பந்திலிருந்தே அனலாக பேட்டிங் செய்து பவுண்டரி பறக்கவிடும் முன்னாள் இந்தியா அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கிற்கே டஃப் கொடுக்கும் வகையில் பிரித்திவி ஷா பேட்டிங் செய்தார்.

அப்படியே நேர்மாறாக களத்தில் பறாங்கல்லாக நின்று எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து 50 பந்துகளுக்கு மேல் சந்தித்தாலும் தேவையானபோது தான் முதல் ரன்னை எடுப்பேன் என்ற வகையில் பலமுறை பேட்டிங் செய்த ஜாம்பவான் ராகுல் டிராவிட்ட்டுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து தம்மால் அதிரடியாகவும் பொறுமையின் சிகரமாகவும் விளையாட முடியும் என காட்டியது ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது.

Advertisement