IND vs RSA : கதையே வேற ! சகோதரருக்காக தினேஷ் கார்த்திகை பழி வாங்கினாரா பாண்டியா, ஆதாரத்தை நீட்டும் ரசிகர்கள்

- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதி துவங்கியது. டெல்லியில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 211/4 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சமீபத்திய ஐபிஎல் தொடரில் தடுமாறிய இஷான் கிசான் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (48) ரன்களை விளாசி நல்ல பார்முக்கு திரும்பினார்.

அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய ருத்ராஜ் கைக்வாட் 23 (15) ரன்கள் எடுக்க மிடில் ஆர்டரில் மிரட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் 36 (27) ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட்  29 (16) ரன்களும் அதிரடியாக எடுத்தனர். இறுதியில் நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

இந்தியா தோல்வி:
அதை தொடர்ந்து 212 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 10 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் ட்வய்ன் பிரிடோரியஸ் 29 (13) ரன்களை அதிரடியாக எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 (18) ரன்களில் நடையை கட்டியதால் தென் ஆப்பிரிக்கா 81/3 என வெற்றி இரு பக்கமும் சமமாக இருந்தது. அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் – ராசி வேன் டெர் டுஷன் ஆகியோர் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் உட்பட தரமான பவுலர்களையும் சரமாரியாக அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் தோல்வியை பரிசளித்தனர்.

அதில் டுஷன் 75* (46) ரன்கள் எடுக்க டேவிட் மில்லர் 64* (31) ரன்களை எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா சிறப்பான வெற்றி பெற்று 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் அசத்தினாலும் பந்துவீச்சில் மொத்தமாக சொதப்பிய இந்தியா தலைகுனியும் வகையில் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்னடைவிற்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

பாண்டியா – டிகே சர்ச்சை:
முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தபோது அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை 3 வருடங்கள் கழித்து சமீபத்திய ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து பெங்களூரு அணிக்கு பினிஷராக மிரட்டிய தினேஷ் கார்த்திக் தனது முதல் பந்தாக எதிர்கொண்டார். அதில் ரன் எதுவும் எடுக்க முடியாத அவர் உடனடியாக அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை ஹர்டிக் பாண்டியாவிடம் கொடுத்தார். அதில் 3-வது பந்தில் ரன் எடுக்க முடியாத பாண்டியா 4-வது பந்தில் சிக்ஸர் அடித்தார். 5-வது பந்தில் பவுண்டரி அடிக்க முயன்ற போதிலும் சிங்கிள் மட்டுமே கிடைத்தது.

ஆனால் என்னமோ எதிர்ப்புறம் பேட்டிங் பற்றி ஒன்றுமே தெரியாத பவுலர் இருப்பது போல சிங்கிள் எடுக்க மறுப்பு தெரிவித்த அவர் தினேஷ் கார்த்திக்கை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டு கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். டி20 கிரிக்கெட்டில் வெறும் 1 ரன் என்பது வெற்றியை தலைகீழாக மாற்ற கூடியது என்ற சூழ்நிலையில் பாண்டியாவின் இந்த செயல் ரசிகர்களை கோபப்படுத்தியது. அதிலும் ஐபிஎல் 2022 தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் கேப்டனாக கோப்பையை வென்ற இருமாப்பில் அவ்வாறு நடந்து கொள்வதாக பாண்டியாவை பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

கதையே வேற:
ஆனால் கடந்த 2019இல் நியூசிலாந்தின் ஹமில்டன் நகரில் அந்த அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய 3-வது டி20 போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் 2-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் 3-வது பந்தில் சிங்கிள் கிடைத்தபோதும் எதிர்ப்புறம் க்ருனால் பாண்டியா இருந்ததால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அதன்பின் 4-வது பந்தில் சிங்கிள் எடுத்த தினேஷ் கார்த்திக்கிடம் 5-வது பந்தில் க்ருனால் பாண்டியா சிங்கிள் எடுத்து மீண்டும் ஸ்ட்ரைக் கொடுத்தார்.

இறுதியில் கடைசி பந்தில் கார்த்திக் சிக்ஸர் பறக்க விட்ட போதிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அன்றைய நாளில் தனது சகோதரரான க்ருனால் பாண்டியாவை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட தினேஷ் கார்த்திக்கை பழி வாங்கத்தான் தற்போது பாண்டியா அவ்வாறு செய்துள்ளார் என்று ஆதாரத்துடன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புதிய புயலைக் கிளப்புகின்றனர்.

இதையும் படிங்க : அவங்க 2 பேரும் வந்துட்டா நான் வெளிய போயிடுவேன். அதுதான் டீமுக்கு நல்லது – உருக்கமாக பேசிய இஷான் கிஷன்

இருப்பினும் தினேஷ் கார்த்திக் ஒரு முழு பேட்ஸ்மேன் என்ற நிலையில் க்ருனால் பாண்டியா ஒரு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதால் அப்போட்டியில் சிங்கிள் எடுக்க மறுப்பு தெரிவித்திருக்கலாம். ஆனாலும் நாட்டுக்காக அதை மறந்து இப்போட்டியில் சிங்கள் எடுக்காமல் சகோதரர் தான் முக்கியம் என்ற வகையில் தினேஷ் கார்த்திக்கை உண்மையிலேயே ஹர்திக் பாண்டியா பழிவாங்கினாரா என்பது அவருக்கே வெளிச்சமாகும்.

Advertisement