தல தோனியின் பிறந்தநாளை 2 மாநிலங்களில் மெகா கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் – எங்கே, எவ்வளவு உயரம் தெரியுமா?

- Advertisement -

நட்சத்திர முன்னாள் வீரர் எம்எஸ் தோனி ஜூலை 7ஆம் தேதியன்று தன்னுடைய 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி போன்ற கிரிக்கெட் பிரபலமில்லாத ஊரில் பிறந்து நாட்டுக்காக விளையாடும் லட்சியத்திற்காக ரயில்வே டிக்கெட் கலெக்டர் வேலையை விட்டு உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் கடந்த 2004ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே டக் அவுட்டானார்.

இருப்பினும் அதற்கெல்லாம் அசராமல் குறுகிய காலத்திலேயே அதிரடியாக விளையாடிய அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டும் இல்லாமல் வெற்றிகளில் பங்காற்ற வேண்டும் என்ற தற்போதைய நிலைமை உருவாவதற்கான இலக்கணத்தை ஏற்படுத்தினார். மேலும் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து விக்கெட் கீப்பிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் 2007ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்து அனுபவமில்லாத போதிலும் இளம் வீரர்கள் கொண்ட அணியை சிறப்பாக வழி நடத்தி முக்கிய நேரத்தில் தைரியமான முடிவுகளை எடுத்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்.

- Advertisement -

மாஸ் கட் அவுட்:
அதே போல 2010இல் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இந்தியாவை தரம் உயர்த்திய அவர் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பையில் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தார். மேலும் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற அவர் 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார்.

அத்துடன் சீனியர் வீரர்களை கழற்றி விட்டு இப்போதைய அணி உருவாவதற்கு அப்போதே ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்த அவர் தம்முடைய கேப்டன்ஷிப் பதவிவையும் விராட் கோலியிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாடி 2019 உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் அவர் இந்த வருடமும் சில போட்டிகளில் தம்முடன் பிறந்த ஃபினிஷிங் ஸ்டைல் எப்போதும் மாறாது என்பதை நிரூபித்து சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

அந்தத் தொடரில் ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் குழந்தையை போல நெஞ்சில் ஆட்டோகிராப் வாங்கியதை போல இந்தியா முழுவதும் கிரிக்கெட்டையும் தாண்டி பலருக்கு அவர் ரோல் மாடலாக திகழ்கிறார். அப்படி இந்தியாவின் மகத்தான விளையாட்டு ஜாம்பவானாக கருதப்படும் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏராளமான ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். அந்த வரிசையில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள நந்திகாமா என்னும் ஊரில் தோனிக்கு 77 அடி உயர கட் வைத்து ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.

குறிப்பாக இளம் வயதிலேயே சுமாரான ஃபிட்னஸ் காரணமாக தடுமாறும் பல வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த ஐபிஎல் தொடரில் 41 வயதிலும் அசத்திய தோனி கட்டுமஸ்தான உடம்புடன் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் கட் அவுட்டாக வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த கட் அவுட் இதற்கு முன் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களுக்கு வைக்கப்பட்டதை விட மிகப்பெரிய உயரம் என்பது ஸ்பெஷலாகும்.

இதையும் படிங்க: முழுசா ஃபிட்டாக வந்துட்டேன், இந்தியா நமக்கு ஒரு மேட்டரே இல்ல – 2023 உ.கோ பற்றி நட்சத்திர பாக் வீரர் பேட்டி

அதே போல ஹைதராபாத் நகரில் இருக்கும் சுதர்சன் தியேட்டர் அருகே 52 அடி பெரிய கட் அவுட் வைத்து அந்த ஊரைச் சேர்ந்த ரசிகர்கள் தோனியின் கொண்டாட்டத்தை முன்கூட்டியே துவக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இந்த கொண்டாட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைமையில் நாமும் இந்தியாவின் மகத்தான கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வோம்.

Advertisement