நடராஜனுக்கா? வாய்ப்பில்ல ராசா – நட்டுவை மொத்தமாக கழற்றிவிடும் பிசிசிஐ, தமிழக ரசிகர்கள் கோபம், என்ன நடந்தது

Nattu
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடர் துவங்குவதற்கு இன்னும் 15 நாட்கள் கூட இல்லாத நிலையில் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2007க்குப்பின் கோப்பையை வெல்வதற்காக முழுவீச்சில் தயாராகி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் டி20 அணியாக இத்தொடரில் களமிறங்குகிறது.

இருப்பினும் அதற்காக அறிவிக்கப்பட்ட அணியில் நம்பிக்கை நட்சத்தி ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே காய்த்தால் வெளியேறிய நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. ஏனெனில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் ஆகிய உலக கோப்பையில் இடம் பிடித்துள்ள இதர இந்திய பவுலர்கள் 130 கி.மீ வேகத்தில் மட்டும் வீசக்கூடியவர்கள் என்பதுடன் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர்.

- Advertisement -

நடராஜனுக்கு டாட்டா:
இருப்பினும் பும்ரா இல்லாத குறையை சமாளிப்பதற்காக ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருக்கும் தீபக் சஹர், ஷமி ஆகியோர் முதன்மை அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசியாக சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வரும் டி20 தொடரை முடித்துக்கொண்டு அக்டோபர் 6ஆம் தேதியன்று ரோகித் சர்மா தலைமையிலான உலக கோப்பை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது.

ஆனால் ஸ்டேண்ட் பை லிஸ்டில் இருக்கும் சஹர், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளதால் அந்த தொடரை முடித்துக் கொண்டு ஒரு வாரம் தாமதமாக ஆஸ்திரேலியா புறப்பட உள்ளனர். பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட் போன்ற இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்பதால் அவர்களை சமாளிப்பதற்காக தீபக் சஹர் அடங்கிய ஸ்டேண்ட் பை லிஸ்ட் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் போது முகேஷ் சவுத்ரி மற்றும் சேட்டன் சக்காரியா ஆகிய 2 இளம் இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களையும் சேர்த்து அனுப்ப பிசிசிஐ புதிய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அவர்களுடன் உம்ரான் மாலிக், குல்தீப் சென் என எக்ஸ்ட்ராவாக மொத்தம் 4 இந்திய பவுலர்கள் நெட் பந்துவீச்சாளராக ஆஸ்திரேலியாவுக்கு பறக்க உள்ளனர். ஆனால் இந்தப் பட்டியலில் கூட தமிழகத்தின் நடராஜன் சேர்க்கப்படாதது தமிழக ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் அற்புதமாக செயல்பட்டு கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான நடராஜன் அந்த சுற்றுப்பயணத்தில் நிகழ்ந்த 3 வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் துரதிஸ்டவசமாக அந்த சுற்றுப்பயணத்திற்கு பின்பாக காயமடைந்த அவர் ஐபிஎல் 2021 தொடரிலும் முழுமையாக விளையாடவில்லை. அதன்பின் காயத்திலிருந்து குணமடைந்த அவருக்கு மறு வாய்ப்பு வழங்காமல் கடந்த ஒரு வருடமாக தேர்வுக் குழுவும் அணி நிர்வாகமும் காரணமின்றி கழற்றி விட்டு வருகிறது. அதிலும் சம்பந்தமின்றி பரணில் கிடந்த உமேஷ் யாதவை தூசி தட்டி 3 வருடங்கள் கழித்து திரும்ப கொண்டு வந்த ரோகித் சர்மா அடங்கிய அணி நிர்வாகம் நடராஜனை தேர்வு செய்யாதது ஏன் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்புகின்றனர்.

அந்த நிலைமையில் பும்ராவுக்கு பதில் உலகக்கோப்பை அணியிலும் ஸ்டாண்டி பை லிஸ்டிலும் அவரை தேர்வு செய்யாதது பரவாயில்லை குறைந்தபட்சம் நெட் பவுலராக சேர்த்திருக்கலாமே என்று ரசிகர்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். ஏனெனில் 2020இல் நெட் பவுலராக சென்று தான் முதன்மை பவுலர்கள் காயமடைந்த போது வாய்ப்பு பெற்ற நடராஜன் 3 வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி விளையாடினார்.

அதுபோக நெட் பந்து வீச்சாளராக இடதுகை பவுலர்கள் தேவை என்ற நிலைமையில் சக்காரியா, முகேஷ் சவுத்ரி ஆகியோரை விட திறமையும் ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவமும் கொண்டுள்ள நடராஜன் தகுதியானவர் என்றும் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனாலும் ரசிகர்களின் கோரிக்கைகளை இப்படி தொடர்ந்து புறக்கணிக்கும் பிசிசிஐ நடராஜனுக்கு இனிமேல் வாய்ப்பில்லை என்பது போல் இவ்வாறு தொடர்ந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement