
ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. வருணபகவான் ஆசிர்வாதத்துடன் ஓவருக்கு ஓவர் திரில்லர் திருப்பங்களுடன் கடைசி ஓவர் வரை அனல் தெறித்த அப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக்கோப்பையில் வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துப் பழி தீர்த்துத்துள்ளது. அப்போட்டியில்முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் போராடி 159/8 ரன்கள் சேர்த்தது.
கேப்டன் பாபர் அசாம் 0, முகமது ரிஸ்மான் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 52* (42) ரன்களும் இப்திகார் அகமது 51 (34) ரன்களும் குவித்தனர். இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 4, ராகுல் 4, சூரியகுமார் 15, அக்சர் படேல் 2 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.
அழுத்தத்தில் சொதப்பல்:
அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று திண்டாடிய இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி விராட் கோலியுடன் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ஹர்திக் பாண்டியா வெற்றியை உறுதி செய்து கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் 40 (37) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே சிங்கிள் எடுக்க 3வது பந்தில் 2 ரன்களை விளாசிய விராட் கோலி 4வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார்.
ஆனால் இடுப்பளவு வந்ததால் நோ பாலாக அறிவிக்கப்பட்டு மீண்டும் வீசப்பட்ட அந்த பந்தை மீண்டும் நவாஸ் ஒயிட் வீசினார். அதனால் மறுபடியும் வீசப்பட்ட அதே பந்தில் விராட் கோலி கிளீன் போல்டானாலும் ஃப்ரீ ஹிட் என்பதை பயன்படுத்திய இந்தியா 3 ரன்கள் எடுத்தது. அதனால் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது மீண்டும் முஹமது நவாஸ் ஒய்ட் போல் வீசினார். அதில் ரன்கள் எடுக்க தவறியதுடன் கோட்டைவிட்ட தினேஷ் கார்த்திக் தேவையின்றி கிரீஸ் விட்டு வெளியேறி இக்கட்டான நேரத்தில் பொறுப்பின்றி ஸ்டம்பிங் முறையில் அவுட்டானது பரபரப்பையும் இந்தியாவுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியது.
ஆனால் அப்போது களமிறங்கிய தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் கிட்டத்தட்ட மீண்டும் அதே போல் வீசப்பட்ட கடைசி பந்தை எதுவுமே செய்யாமல் விட்டதால் மீண்டும் இந்தியாவுக்கு ஒயிட் கிடைத்து 1 ரன்னும் 1 எக்ஸ்ட்ரா பந்தும் கிடைத்தது. அதனால் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டபோது ஃபீல்டர்கள் உள்வட்டத்திற்கு உள்ளே வந்தாலும் அதற்காக அசராத அஷ்வின் மிட் ஆஃப் திசையில் தூக்கி அடித்து 20 ஓவரில் 160/6 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
இந்த இடத்தில் எப்படி விளையாடியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அஷ்வினும் எப்படி விளையாடியிருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தினேஷ் கார்த்திக்கும் செயல்பட்டனர். 2004இல் அறிமுகமானாலும் இதுபோல் கிடைத்த வாய்ப்புகளில் ஓரிரு போட்டிகளை தவிர்த்து 2019 உலகக் கோப்பை அரையிறுதி உட்பட பெரும்பாலான அழுத்தம் நிறைந்த போட்டிகளில் இப்படி தடுமாற்றத்தை வெளிப்படுத்திய காரணத்தாலேயே தோனிக்கு ஈடுகொடுத்து நிரந்தர வாய்ப்பை பெற முடியாமல் தினேஷ் கார்த்திக் தனது கேரியரை தொலைத்தார் என்றே கூறலாம்.
மறுபுறம் அந்த இடத்தில் அஷ்வினை கை தட்டி பாராட்ட வேண்டும். ஏனெனில் ஒருவேளை அந்த ரன்னை அவர் எடுக்கத் தவறியிருக்கும் பட்சத்தில் 82* (53) ரன்கள் குவித்த விராட் கோலியின் போராட்டமும் இந்தியாவின் வெற்றியும் சூப்பர் ஓவர் வரை சென்று கேள்வி குறியாகியிருக்கும். மேலும் அந்த நேரத்தில் கவர் திசையில் அடிக்குமாறு சொல்லியும் அஷ்வின் தன்னுடைய யோசனையில் மிட் ஆஃப் திசைக்கு மேல் அடித்தது அவரது திறமையை காட்டுவதாக போட்டி முடிந்த பின் விராட் கோலியே பாராட்டினார். அத்துடன் பேட்டிங் பற்றி தெரியாத சஹாலுக்கு பதில் இப்படி பேட்டிங்கில் வெற்றிக்குக் காரணமாக இருந்த அஷ்வின் தான் இந்த உலக கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாட தகுதியானவர் என்று ரசிகர்களும் பாராட்டுகின்றனர்.