இந்த வேகத்தில் எந்த கொம்பனாலும் அடிக்க முடியாது! சாதனை படைத்த இளம் வீரருக்கு பெருகும் ஆதரவு

Umran Malik 5 Fer
- Advertisement -

எதிர்பாரா திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற 40-வது போட்டியில் ரசிகர்கள் எதிர்பாராத மிகப்பெரிய திருப்பங்கள் அமைந்து திரில்லர் விருந்து படைத்தது. அப்போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 195/6 ரன்களை விளாசியது. அந்த அணிக்கு அதிக பட்சமாக இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 65 (42) ரன்களும் ஐடன் மார்க்ரம் 56 (40) ரன்களும் குவிக்க குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய முகமது சமி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

Saha GT

- Advertisement -

அதை தொடர்ந்து 196 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சஃகா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான அடித்தளமிட்டனர்.

மிரட்டிய உம்ரான் மாலிக்:
அப்போது 7-வது ஓவரை முதல் முறையாக வீசவந்த இளம் மின்னல் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சுப்மன் கில்லை 22 (24) ரன்கள் எடுத்திருந்தபோது கிளீன் போல்டாக்கியத்துடன் அடுத்த ஓவரில் குஜராத்தின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 10 (6) ரன்களில் எல்பிடபிள்யூ செய்தார். அந்த நிலையில் மறுபுறம் 11 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 68 (38) ரன்கள் எடுத்து போராடிக்கொண்டிருந்த ரித்திமான் சாஹாவையும் மிரட்டலான யார்க்கர் பந்தால் கிளீன் போல்டாக்கிய அவர் 15-வது ஓவரின் 5-வது பந்தில் மிரட்டல் நாயகன் டேவிட் மில்லரின் ஸ்டம்ப்களையும் தெறிக்க விட்டு 6-வது பந்தில் இளம் வீரர் அபினவ் மனோகரையும் கிளீன் போல்டாக்கி கோல்டன் டக் அவுட் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தார்.

Umran Malik Pace

இதனால் போட்டி முழுமையாக ஹைதராபாத் பக்கம் திரும்பிய நிலையில் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்ட போது யாரும் எதிர்பாராத வண்ணம் ராகுல் திவாடியா மற்றும் ரஷித் கான் ஆகியோர் அதிரடி சரவெடியாக ரன்களை குவித்து ஹைதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தனர். குறிப்பாக கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 1, 6, 0, 6, 6 என அடுத்தடுத்த சிக்ஸர்களை தெறிக்கவிட்ட இந்த ஜோடியில் ராகுல் திவாடியா 40* (21) ரன்களும் ரசித் கான் 31* (11) ரன்களும் எடுத்து குஜராத்துக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதனால் அந்த அணி பங்கேற்ற 8 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது

- Advertisement -

மின்னல்வேக உம்ரான்:
மறுபுறம் தனது அசுர வேகப்பந்துகளால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனி ஒருவனை போல உம்ரான் மாலிக் கொண்டு வந்த வெற்றியை இதர ஹைதராபாத் பவுலர்கள் மோசமாக பந்துவீசி கோட்டை விட்டது அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் கூட நேற்றைய போட்டியில் அவர் வீசிய பந்து வீச்சை பார்த்து அசந்த ஐபிஎல் நிர்வாகம் தோல்வி அடைந்தாலும் கூட ஆட்டநாயகன் விருதை அவரின் திறமைக்கு சமர்ப்பித்தது. அதிலும் நேற்றைய போட்டியில் அவர் எடுத்த 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகள் கிளீன் போல்டானதை பார்த்த பல முன்னாள் வீரர்களும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

1. முன்னதாக நேற்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஜெயதேவ் உனட்கட் : 21 வருடம் 204 நாட்கள்
2. உம்ரான் மாலிக் : 22 வருடம் 157 நாட்கள்*
3. அர்ஷிதீப் சிங் : 22 வருடம் 228 நாட்கள்

- Advertisement -

2. மேலும் வெறும் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்கள் பதிவு செய்த சிறந்த பந்துவீச்சு பட்டியலில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. அன்கிட் ராஜ்புத் : 5/14, 2018.
2. வருண் சக்கரவர்த்தி : 5/20, 2020
3. உம்ரான் மாலிக் : 5/25, 2022*

3. இத்துடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த 2-வது பவுலர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. புவனேஸ்வர் குமார் : 5/18, 2017.
2. உம்ரான் மாலிக் : 5/25, 2022*
3. முஹம்மது நபி : 4/11, 2019.

- Advertisement -

இவை அனைத்தையும் விட நேற்றைய போட்டியில் அவர் 5 விக்கெட்டுகள் எடுத்த பந்துகளின் வேகங்கள் இதோ:
1. சுப்மன் கில் : 144.2 கி.மீ
2. ஹர்டிக் பாண்டியா : 145.1 கி.மீ
3. ரிதிமான் சஹா : 152.8 கி.மீ
4. டேவிட் மில்லர் : 148.7 கி.மீ
5. அபினவ் மனோகர் : 146.8 கி.மீ

இந்த அளவுக்கு அசுர வேகத்தில் வீசினால் எந்த கொம்பனாலும் அடிக்க முடியாது என்று ரசிகர்கள் இவரின் திறமையை பார்த்து வியக்கிறார்கள். இவர் ஏற்கனவே பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை எடுத்து மெய்டன் ஓவராக வீசி ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையையும் சமன் செய்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் வேகத்திற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கினாலும் தற்போது அதை சரி செய்துள்ள உம்ரான் மாலிக் மிரட்டலான பவுலராக உருவெடுத்துள்ளார்.

இதையும் படிங்க : ரவி சாஸ்திரியின் யோசனையை கையிலெடுத்த பி.சி.சி.ஐ – விராட் கோலி விடயத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

இந்திய மைதானங்களிலேயே இப்படி என்றால் வேகத்திற்கு கை கொடுக்க கூடிய ஆஸ்திரேலியாவில் இவர் நிச்சயம் ஜொலிப்பார் என்பதால் வரும் அக்டோபர் மாதம் அங்கு நடைபெறும் டி20 உலக கோப்பையில் இவரை கண்டிப்பாக இந்தியா தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆதரவு பெருகி வருகிறது.

Advertisement