IND vs IRE : ரசிகர்களின் மெகா ஆதரவுடன் நீண்டநாள் கனவை நிஜமாக்கிய இந்திய வீரர் – முன்னாள் வீரர்கள் வாழ்த்து

Sanju Samson
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற வந்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்று அசத்தியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் ஜூன் 26இல் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் அற்புதமாக செயல்பட்ட இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த நிலைமையில் ஜூன் 28-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 225/7 ரன்களை வெளுத்து வாங்கியது.

இந்தியாவுக்கு இஷான் கிசான் 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தாலும் நீண்ட நாட்களுக்குப்பின் தொடக்க வீரராக கிடைத்த வாய்பை பயன்படுத்திய சஞ்சு சாம்சன் அடுத்து வந்த தீபக் ஹூடாவுடன் இணைந்து அதிரடியாக பேட்டிங் செய்தார். பவர்பிளே ஓவர்களில் அயர்லாந்தை பந்தாடிய இந்த ஜோடி 17 ஓவர்கள் வரை சரவெடியாக பேட்டிங் செய்து 2-வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக புதிய சாதனை படைத்தது.

- Advertisement -

த்ரில் வெற்றி:
இந்த ஜோடியில் 9 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 77 (42) ரன்களில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 15 (5) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த தீபக் ஹூடா தனது பங்கிற்கு 9 பவுண்டரி 6 சிக்சருடன் முதல் சதமடித்து 104 (57) ரன்களில் ஆட்டமிழந்தார். அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் அடைர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 226 என்ற பெரிய இலக்கை துரத்திய அயர்லாந்தும் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிக்கு போராடியது.

அந்த அணிக்கு கேப்டன் ஆண்டி பால்பிரின் – பால் ஸ்டிர்லிங் ஜோடி 72 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தது. அதில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 40 (18) ரன்களில் ஸ்டெர்லிங் அவுட்டாக அடுத்து வந்த டிலானி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மறுபுறம் 3 பவுண்டரி 7 சிக்சருடன் வெற்றிக்காக போராடிய கேப்டன் பால்பரின் 60 (37) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டூக்கர் 5 (9) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

அந்த சமயத்தில் 5 பவுண்டரியுடன் 39 (28) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடியே டெக்டர் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்ததால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அதை வீசிய இளம் வீரர் உம்ரான் மாலிக் 0, 1 நோபால், 4, 4, 1, 1 பைஸ், 1 என 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

மெகா ஆதரவுடன் சாம்சன்:
மறுபுறம் மார்க் அடைர் 23* (12) ரன்கள் ஜார்ஜ் டெக்ரெல் 34* (16) ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்துவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடிய அயர்லாந்து வீரர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. முன்னதாக இப்போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்கியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. கேரளாவைச் சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியுடன் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த 2015லேயே இந்தியாவுக்காக முதல் முறையாக டி20 கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

ஆனால் அதில் பெரிய ரன்களை எடுக்க தவறிய அவருக்கு கடந்த 6 வருடங்களாக ஒருமுறைகூட தொடர்ச்சியான வாய்ப்பும் ஆதரவும் கிடைத்ததே இல்லை. அதற்காக மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு கடந்த 6 வருடங்களில் அதன் பலனாக வெறும் 13 போட்டிகளில் விளையாடும் தொடர்ச்சியற்ற வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. அந்த நிலைமையில் ஐபிஎல் 2022 தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்குப்பின் ராஜஸ்தானை பைனலுக்கு அழைத்துச் சென்ற 2-வது கேப்டனாக அசத்திய போதிலும் சமீபத்திய தென்னாப்பிரிக்க தொடரில் அவரை தேர்வு குழு கண்டுக்கவில்லை.

அதனால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கேள்வி கேட்டதால் ஒருவழியாக அயர்லாந்து தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வானார். அதில் முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத அவர் நேற்றைய போட்டியில் காயமடைந்த ருதுராஜ்க்கு பதில் களமிறங்குகிறார் என்று டாஸ் வீசிய பின் கேப்டன் பாண்டியா அறிவித்த போது களத்தில் இருந்த ரசிகர்கள் விண்ணதிர முழங்கி சாம்சனுக்கு தங்களது மெகா ஆதரவை கொடுத்தனர்.

- Advertisement -

அந்த அன்பு கலந்த ஆதரவுடன் அற்புதமாக பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் 13 போட்டிகளுக்கு பின் 6 வருடங்களுக்குப் பின் ஒருவழியாக முதல் அரை சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தனது நீண்ட நாள் கனவை நிஜமாக்கியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs IRE : 2வது போட்டியில் இந்தியாவும், முக்கிய பவுலர்களும் படைத்த மோசமான சாதனைகள் இதோ

அதனால் இயன் பிஷப், இர்பான் பதான் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் இனிமேல் இதே போல் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையான வாய்ப்பை பிடிக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement