CWC 2023 : காசு வாங்குறீங்கள்ள, இப்படி இருந்தா யார் வருவா? ஆதாரத்துடன் ஜெய் ஷா’வை விளாசிய ரசிகர்

Ahmedabad
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் அடுத்த சாம்பியனை நிர்ணயிப்பதற்காக ஐசிசி நடத்தும் 2023 உலகக்கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்கியது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் ஆரம்பம் முதலே நிறைய குளறுபடிகளை பிசிசிஐ அரங்கேற்றி வருவது பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அட்டவணை அறிவிக்கப்பட்டு பின்னர் மாநில வாரியங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதை தொடர்ந்து டிக்கெட்களை வாங்குவதற்கு பல ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை செலவழிக்க தயாராக இருந்த ரசிகர்கள் பல மணி நேரங்கள் காத்திருந்தும் பெரும்பாலானவர்களுக்கு அது கிடைக்காததால் ஏமாற்றத்தை சந்தித்தது பெரிய சர்ச்சையாக மாறியது. அந்த நிலைமையில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய பயிற்சி போட்டி நடைபெற்ற ஹைதராபாத் மைதானத்தின் மேல் இருக்கைகள் பறவைகள் எச்சமிட்டு சுத்தம் செய்யப்படாமல் இருந்ததை ஒரு ரசிகர் ஆதாரத்துடன் விமர்சித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

யார் வருவா:
அந்த நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத் நகரில் மோதின. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட அம்மைதானம் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக உலக சாதனை படைத்துள்ளதை அனைவரும் அறிவோம். ஆனால் உலகக்கோப்பை துவக்க போட்டியை பார்க்க அந்த மைதானத்தில் 10000 ரசிகர்கள் கூட ஆரம்பத்தில் வராதது மொத்த இந்திய ரசிகர்களுக்கும் தலை குனிவாக அமைந்தது.

இருப்பினும் அவை அனைத்தையும் தாண்டி அப்போட்டியை பார்ப்பதற்காக அகமதாபாத் மைதானத்திற்கு சென்ற ஒரு ரசிகர் தம்முடைய டிக்கெட் நம்பர் கொண்ட சீட்டை தேடி சென்ற போது மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. ஏனெனில் ஹைதராபாத் மைதானத்தை போலவே அவர் அமர வேண்டிய இருக்கைகள் முழுவதுமாக பறவைகள் எச்சமிட்டு சுத்தம் செய்யப்படாமல் மோசமான நிலையில் இருந்தது. அதனால் ஏமாற்றமடைந்த அந்த ரசிகர் அதை புகைப்படம் எடுத்து பதிவிட்டார்.

- Advertisement -

இருப்பினும் ஒருசில இருக்கைகள் அப்படி இருக்கலாம் அதற்காக உலகின் மிகப்பெரிய மைதானமாகவும் ஃபைனல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நடைபெறும் மைதானத்தை குறை சொல்லாதீர்கள் என்று அந்த ரசிகருக்கு இதர ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். அப்போது நியாயம் தன் பக்கம் இருந்ததால் உடனடியாக வீடியோ எடுத்த அந்த ரசிகர் பல இருக்கைகள் மோசமாக இருப்பதை பதிவிட்ட பின்பு தான் அனைத்து ரசிகர்களும் உண்மையை தெரிந்து கொண்டனர்.

இதையும் படிங்க: AFG vs BAN : நல்லா ஸ்டார்ட் பண்ணியும் நாங்க தோக்க இதுவே காரணம். தோல்விக்கு பிறகு – ஆப்கான் கேப்டன் வருத்தம்

அதனால் பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா சொந்த ஊரான குஜராத்தின் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இப்படி ஒரு நிலையா என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். மேலும் பல ஆயிரங்களை டிக்கெட்டின் விலையாக வாங்கும் பிசிசிஐ உலகக்கோப்பைக்காக இவற்றையெல்லாம் சுத்தப்படுத்த வேண்டாமா என்று தெரிவிக்கும் ரசிகர்கள் இப்படி இருந்தால் யார் போட்டியை பார்க்க வருவார் என்றும் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement