பாகிஸ்தான் அணி சமீப காலங்களில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் கத்துக்குட்டியான வங்கதேசத்துக்கு எதிராக அந்த அணி முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை சந்தித்தது. அந்த சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்சில் 500+ ரன்கள் அடித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாகவும் பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த சில வருடங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் பாபர் அசாம் ஓய்வு என்ற பெயரில் கழற்றி விடப்பட்டுள்ளார்.
கழற்றி விடப்பட்ட பாபர்:
பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் 2022 டிசம்பர் மாதத்திற்கு பின் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அத்துடன் சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் தோற்க அவர் முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் சுமாரான ஃபார்ம் காரணமாக பாபர் அசாமுக்கு கொடுப்பதாக பாகிஸ்தான் வாரியம் அறிவித்துள்ளது.
அதே போலவே சாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்களையும் ஓய்வு என்ற பெயரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கழற்றி விட்டுள்ளது. இந்நிலையில் 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய போதும் விராட் கோலியை இந்தியா கழற்றி விடவில்லை என்று பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாபர் அசாமை கழற்றி விட்டு பாகிஸ்தான் தவறு செய்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
விராட் கோலி மாதிரி:
இது பற்றி ட்விட்டரில் அவர் புள்ளிவிவரத்துடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளது கவலையை கொடுக்கிறது. 2020 – 2023 காலகட்டங்களில் சுமாராக செயல்பட்ட போது விராட் கோலியை இந்தியா பெஞ்சில் அமர வைக்கவில்லை. அந்த காலகட்டங்களில் அவர் முறையே 19.33, 28.21, 26.50 என்ற சுமாரான சராசரியையே கொண்டிருந்தார்”
இதையும் படிங்க: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை – எந்த சேனலில் பார்க்கலாம்?
“அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய முதன்மை பேட்ஸ்மேனை சொல்லப்போனால் பாகிஸ்தான் உருவாக்கிய சிறந்த வீரரை ஒதுக்குவது அணியின் மற்ற வீரர்களுக்கு எதிர்மறையான செய்தியைக் கொடுக்கும். பதற்றம் எனும் பொத்தானை அமுக்குவதற்கு நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நம்முடைய வீரர்களை குறைத்து மதிப்பிடுவதற்கு பதிலாக அவர்களுக்கு பாதுகாப்பும் வாய்ப்பும் கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.