சென்னை ரசிகர்களை ஏங்க வைத்த டு பிளேஸிஸ்! தோற்றாலும் கேப்டனான முதல் போட்டியிலேயே சரித்திர சாதனை

- Advertisement -

மிகவும் எதிர்பார்ப்புக்கிடையே துவங்கியுள்ள ஐபிஎல் 2022 தொடர் மிகுந்த பரபரப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கிய இந்த தொடரின் 2-வது நாளில் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

Virat Faf Du Plessis

- Advertisement -

இதை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டு பிளேஸிஸ் தொடக்க வீரராக விளையாட அவருடன் இளம் வீரர் அனுஜ் ராவத் களமிறங்கினார். பவர்பிளே ஓவர்களில் அதிரடி காட்டிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தபோது அனுஜ் ராவத் 21 ரன்களில் அவுட்டானார்.

ஏங்கிய சென்னை ரசிகர்கள்:
இருப்பினும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த டு ப்லஸ்ஸிஸ் தொடர்ந்து அதிரடி சரவெடியாக பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பந்தாடினார். வழக்கமாக சிக்ஸர்களை காட்டிலும் அதிக பவுண்டரிகளை அடிக்கும் அவர் பெங்களூர் அணிக்கு முதல் முறையாக பேட்டிங் செய்த இந்த போட்டியில் பவுண்டரிகளை காட்டிலும் அதிக இமாலய சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவரின் அந்த ஆட்டத்தை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் “இவரைப் போய் சென்னை மிஸ் பண்ணி விட்டதே” என்ற ஏக்கத்துடன் கூடிய கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

faf 2

மறுபுறம் இது போன்ற ஒரு நல்ல தரமான வீரரை எங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததற்கு நன்றி என சென்னை ரசிகர்களுக்கு பெங்களூரு ரசிகர்கள் பதிலளித்ததை பல இடங்களில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 51 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட அரைசதம் கடந்து 88 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவருடன் பேட்டிங் செய்த நட்சத்திரம் விராட் கோலி 29 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 41* ரன்களும் கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களை வெளுத்து வாங்கி 32* ரன்களும் எடுத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு 205 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பஞ்சாப் அதிரடி வெற்றி:
அதை தொடர்ந்து 206 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றி பெறும் எண்ணத்தில் விளையாடியது என்றே கூற வேண்டும். ஏனெனில் அந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க அவருடன் களமிறங்கிய அனுபவ வீரர் ஷிகர் தவான் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அடுத்ததாக களமிறங்கிய இலங்கை வீரர் ராஜபக்சே அதை அற்புதமாக பயன்படுத்தி வெறும் 22 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 43 ரன்கள் விளாசினார்.

PBKS vs RCB2 Odean Smith Shahrukan

அந்த நேரத்தில் அடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டன் 19 ரன்களில் ஆட்டமிழக்க இளம் வீரர் ராஜ் பாவா முதல் பந்திலேயே டக் அவுட்டானார். இதனால் கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவை என்ற நிலையால் பஞ்சாப் அணியின் வெற்றி கேள்விக்குறியானது. அந்த நேரத்தில் களமிறங்கிய தமிழக வீரர் சாருக் கான் அதிரடியாக 24* (20) ரன்கள் எடுக்க அவருடன் ஜோடி சேர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஓடென் ஸ்மித் வெறும் 8 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 இமாலய சிக்சர் உட்பட 25* ரன்கள் விளாசி பெங்களூர் அணியின் வெற்றியை சிதைத்தார். இதனால் 19 ஓவர்களிலேயே 208/5 ரன்களை எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகரமாக சேசிங் செய்து திரில் வெற்றியுடன் இந்த ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக தொடங்கியது.

தோற்றாலும் டு பிளேஸிஸ் சரித்திர சாதனை:
மறுபுறம் 200 ரன்களை அடித்த போதிலும மோசமாக பந்து வீசியதன் காரணமாக நல்ல வெற்றியை எதிரணியிடம் கோட்டைவிட்ட பெங்களூரு அணி இந்த ஐபிஎல் தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ளது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இந்த போட்டியில் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் முதுகெலும்பு வீரர் மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அனுபவ வீரர் டு பிளேஸிஸ் தன்னால் முடிந்த அளவுக்கு பேட்டிங்கில் ரன்களை அடித்து கேப்டன்ஷிப் செய்த போதிலும் முதல் போட்டியிலேயே பெங்களூரு அணிக்கு வெற்றியை பெற்றுத் தர முடியவில்லை.

faf du plessis RCB

இருப்பினும் இந்த போட்டியில் வெறும் 57 பந்துகளில் 88 ரன்களை 154.39 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்த அவர் “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக களமிறங்கிய அறிமுக போட்டியிலேயே அதிக ரன்களை அடித்த வெளிநாட்டு வீரர் என்ற புதிய சரித்திர சாதனையை” படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2019-ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ரோகித் சர்மா இல்லாத வேளையில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கைரன் பொல்லார்ட் அந்த அறிமுக போட்டியிலேயே அதிரடி சரவெடியாக விளையாடி 83 (31) ரன்களை அடித்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. தற்போது 88 ரன்களை கேப்டனான அறிமுகப் போட்டியில் அடித்துள்ள டு பிளசிஸ் அந்த சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

Advertisement