ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பயிற்சி போட்டிகள் நிறைவடைந்து முதன்மை போட்டிகள் அக்டோபர் 5 முதல் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுக்க முழுக்க இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறப்போகும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் நவம்பர் 19 வரை மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து டாப் நட்சத்திர வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தி போராட தயாராகியுள்ளனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் அதிக ஆதிக்கம் செலுத்தக்கூடிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து அசத்தப்போகும் டாப் 4 பவுலர்களை முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் பஃப் டு பிளேஸிஸ் தேர்வு செய்துள்ளார்.
டாப் 4 பவுலர்கள்:
அதில் காயத்திலிருந்து குணமடைந்து வித்தியாசமாக பந்து வீசக்கூடிய இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்யாத அவர் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் முகமது சிராஜை தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல அந்தப் பட்டியலில் ஒரே ஸ்பின்னராக 2023 கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று அசத்தியை இந்தியாவின் குல்தீப் யாதவையும் அவர் தேர்வு செய்துள்ளார்.
அத்துடன் தங்களுடைய நாட்டின் மிரட்டல் வேகப்பந்து வீச்சாளர் ககிஸோ ரபாடா, நியூசிலாந்தின் தரமான ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ள அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இவை அனைத்தும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பொறுத்தமையும். அதில் முகமது சிராஜ் போன்றவர் பந்தை இருபுறமும் திருப்பக்கூடிய தன்மையை கொண்டிருக்கிறார்”
“மேலும் அவர் அனைத்து நேரங்களிலும் ஆஃப் ஸ்டம்ப்பை அட்டாக் செய்ய முயற்சிக்கிறார். அதே போல ட்ரெண்ட் போல்ட், காகிஸோ ரபாடா ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் நிச்சயமாக வெற்றிகரமாக செயல்படுவார்கள். அதே சமயம் ஸ்பின்னர்கள் என்று பார்க்கும் போது குல்தீப் யாதவ் போன்றவர் கண்டிப்பாக அசத்துவார். குறிப்பாக கடந்த 6 மாதங்களாக அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக பந்து வீசியுள்ளார்”
இதையும் படிங்க: உலகக்கோப்பை போட்டிகளை எந்த சேனலில் பாக்கலாம்? மொபைல் மூலம் எவ்வாறு பார்க்கலாம் – ஒளிபரப்பு விவரம் இதோ
“அதிலும் டெயில் எண்டர்களில் ஒரு விக்கெட் விழுந்தால் அடுத்து வரும் பேட்ஸ்மேனுக்கு அவரை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனெனில் அவர் பந்தை இருபுறமும் சுழற்றுவதால் எதிர்கொள்வதற்கு மிகவும் சிக்கலானவராக இருக்கிறார்” என்று கூறினார். இவர்களுடன் பும்ரா, பாகிஸ்தானின் சாகின் அப்ரிடி, இங்கிலாந்தின் மார்க் வுட், ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் போன்ற நட்சத்திர பவுலர்களும் இந்த உலகக் கோப்பையில் அட்டகாசமாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.