
அமெரிக்காவில் 2025 மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஜூன் 30ஆம் தேதி டாலஸ் நகரில் நடைபெற்ற 21வது போட்டியில் எம்ஐ நியூயார்க் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு 5 பவுண்டரி 9 சிக்ஸருடன் 103* (53) ரன்களை அடித்த கேப்டன் ஃபப் டு பிளேஸிஸ் முக்கிய பங்காற்றினார்.
தென்னாபிரிக்காவை சேர்ந்த அவர் 2012 முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2014 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையை தோனி தலைமையில் சிஎஸ்கே அணி வெல்ல அவரும் பங்காற்றினார். அதை விட 2018 ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப்போட்டியில் சிஎஸ்கே 57/5 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
அப்போது அபாரமாக பேட்டிங் செய்த அவர் தனி ஒருவனாக சென்னையை ஃபைனலுக்கு அழைத்துச் சென்று கோப்பையை வெல்ல உதவியையும் மறக்க முடியாது. அதே போல 2021 ஐபிஎல் தொடரில் 633 ரன்களை அடித்த டு பிளேஸிஸ் சென்னை 4வது கோப்பையை வெல்ல உதவினார். அதன் பின் பெங்களூரு, டெல்லி அணிக்காக அவர் விளையாடியது சிஎஸ்கே ரசிகர்களிடம் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இருப்பினும் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ டி20 தொடரில் டு பிளேஸிஸ் சிஎஸ்கே அணியின் கிளையான ஜோஹன்ஸ்பர்க் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடரிலும் கடந்த 3 வருடமாக கேப்டனாக செயல்படும் அவருடைய தலைமையில் டெக்சாஸ் தொடர்ந்து 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் 2012 முதல் சிஎஸ்கே நிர்வாகத்திடம் வாங்கும் சம்பளத்திற்கு டு பிளேஸிஸ் சேவகனாக செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம்.
அவையெல்லாம் ஒருபுறமிருக்க இத்தொடரில் சேன் பிரான்சிஸ்கோ அணிக்கு எதிரான போட்டியிலும் டு பிளேஸிஸ் 100 (51) ரன்கள் குவித்து சதத்தை அடித்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 40 வயதுக்கு பின் 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை டு பிளேஸிஸ் படைத்துள்ளார். இதற்கு முன் கிரேம் ஹிக் (2007), பால் காலிங்வுட் (2017), ஸுபைர் அஹ்மத் (2014), இம்ரான் ஜானத் (2019) ஆகியோர் 40 வயதுக்கு பின் தலா 1 சதம் மட்டுமே அடித்துள்ளார்கள்.
இதையும் படிங்க: 0-5 ன்னு இந்தியா தோத்தாலும் கம்பீரை யாரும் தூக்க மாட்டாங்க.. பி.சி.சி.ஐ அதிகாரி – வெளியிட்ட தகவல்
இது போக டு பிளேஸிஸ் கேப்டனாக மொத்தம் 8 டி20 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் பாபர் அசாம் மற்றும் மைக்கேல் கிளிங்கர் ஆகியோர் கேப்டனாக தலா 7 சதங்களை அடித்ததே முந்தைய சாதனை.