எப்பப்பாரு இந்தியா சொதப்புனா ஐபிஎல்’ல குறை சொல்வதே வேலையா போச்சு – ரசிகர்களுக்கு கெளதம் கம்பீர் பதிலடி

Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட்டில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனால் 2013க்குப்பின் அடுத்த கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் இந்தியா தொடர்ந்து லீக் சுற்றில் அசத்துவதும் நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறுவதும் தொடர் கதையாகி வருகிறது. இத்தனைக்கும் ஐபிஎல் போன்ற அதிகப்படியான அழுத்தம் வாய்ந்த தொடரில் விளையாடிய அனுபவம் கொண்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் ஒரு நாக் அவுட் போட்டியில் நிலவும் அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்தின் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தோற்றதே ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியது.

INDia

- Advertisement -

அதே சமயம் அதே ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவமே இந்தியாவை அடித்து நொறுக்க உதவியதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்தார். இதனால் இந்தியாவுக்கு பயனளிக்காத ஐபிஎல் தொடரை நடத்தி என்ன பயன் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். அது போக ஐபிஎல் தொடரில் பல கோடி ரூபாய்களுக்காக தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடும் ரோஹித் சர்மா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நாட்டுக்காக பணிச்சுமை என்ற பெயரில் ஓய்வெடுப்பதும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைகிறது.

ஐபிஎல் வரப்பிரசாதம்:

அத்துடன் கேஎல் ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் ஐபிஎல் தொடரில் அதிரடி சரவெடியாக விளையாடுவதும் நாட்டுக்காக என்றால் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்துவதையும் ரசிகர்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறார்கள். மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் எந்த போட்டியிலும் தவற விடாமல் விளையாடும் நிலையில் இந்தியாவுக்காக என்று வந்தால் காயமடைந்து வெளியேறுவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் ஐபிஎல் தொடரை தடை செய்யும் வரை இந்தியா உலகக் கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்கள் சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் அதிகமாக பார்க்க முடிகிறது.

இந்நிலையில் ஏதேனும் ஒரு தொடரில் இந்தியா சொதப்பினால் உடனே அதற்கு காரணம் ஐபிஎல் என்று விமர்சனம் வருவதாக முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சில முக்கிய வீரர்கள் சிறப்பாக செயல்படாமல் போவதற்கு ஐபிஎல் மீது பழி போடுவது நியாயமல்ல என்று தெரிவிக்கும் அவர் ஐபிஎல் என்பது இந்தியாவின் வரப்பிரசாதம் என்ற வகையில் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் என்பது இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த சிறந்த வரப்பிரசாதமாகும். இதை நான் எனது அனைத்து அறிவுகளையும் வைத்து சொல்வேன். இருப்பினும் ஐபிஎல் தொடங்கியது முதலே அது பற்றி நிறைய சலசலப்புகள் இருந்து வருகிறது”

- Advertisement -

“குறிப்பாக இந்திய அணி சிறப்பாக செயல்படாத ஒவ்வொரு முறையும் ஐபிஎல் மீது குற்றச்சாட்டு எழுவது நியாயமற்றது. நமது இந்திய அணி ஐசிசி தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் வீரர்களை விமர்சியுங்கள் அவர்களது செயல்பாடுகளை விமர்சியுங்கள் ஆனால் ஐபிஎல் தொடர் மீது தேவையின்றி பழி போடாதீர்கள். அத்துடன் இப்போது இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியாளராக செயல்படும் நிலைமை உருவாகியுள்ளது. நானும் இந்திய அணிக்கு ஒரு இந்தியர் தான் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்பதை வலுவாக நம்புகிறேன்”

Gambhir

“ஏனெனில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இங்கு வந்து சில காலங்கள் இருந்து பணத்தை சம்பாதித்துக் கொண்டு வெளியேறி விடுவார்கள். மேலும் விளையாட்டில் உணர்வுகள் முக்கியமாகும். குறிப்பாக நாட்டுக்காக சர்வதேச அரங்கில் ஏற்கனவே விளையாடியவர்கள் தான் இந்திய கிரிக்கெட் பற்றி அதிக உணர்வை கொண்டிருப்பார்கள். நானும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் ஆலோசகராக உள்ளேன். அதே போல அனைத்து ஐபிஎல் அணிகளிலும் இந்தியர்கள் பயிற்சியாளராக இருப்பதை நான் விரும்புகிறேன்”

“ஏனெனில் பிக்பேஷ் போன்ற இதர தொடர்களில் இந்தியர்களுக்கு பயிற்சியாளர் செயல்படும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் கிரிக்கெட்டில் இந்திய ஆதிக்கம் செலுத்தினாலும் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் அவர்கள் இங்கே வந்து பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள். எனவே முதலில் நமது பயிற்சியாளர்களுக்கு நாம் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement