
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இம்முறை இந்தியாவின் மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ள இந்த தொடரை நேரில் பார்ப்பதற்காக 25% சதவீத ரசிகர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.
எம்எஸ் தோனியின் சென்னை:
இந்த தொடரில் கோப்பை வெல்வதற்காக அனைத்து அணிகளும் மும்பை நகரில் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கோப்பையை தக்க வைப்பதற்காக கடந்த 2 வாரங்களாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஸ்பெஷல் பயிற்சியை மேற்கொண்டு தற்போது மும்பை நகரை வந்தடைந்துள்ளனர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் இன்று வரை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இந்தியாவின் ஜாம்பவான் எம்எஸ் தோனி இந்த வருடமும் அந்த அணியை வழி நடத்துகிறார். இதுவரை 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ள அவர் தனது விலைமதிப்பில்லா அனுபவத்தைப் பயன்படுத்தி இந்த வருடமும் அபாரமாக செயல்பட்டு 5-வது முறையாக கோப்பையை வென்று தருவார் என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.
ரசித் கான் ஆசை:
இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகள் மற்றும் ஐபிஎல் தொடரில் 4 கோப்பைகள் என நல்ல கேப்டனுக்கு எடுத்துக்காட்டாகவும் இலக்கணமாகவும் கருதப்படும் எம்எஸ் தோனியின் கீழ் விளையாடிய இளம் வீரர்கள் நாளடைவில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுத்துள்ளார்கள். சொல்லப்போனால் இன்றைய இந்திய அணியில் ஸ்டார் வீரர்களாக விளங்கும் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் என பெரும்பாலான வீரர்கள் தோனியின் மாணவர்கள் ஆவர். அதன் காரணமாக அவர் தலைமையில் விளையாடுவதற்கு நிறைய இளம் வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் கூட ஆசைப்படுகிறார்கள்.
அந்த வகையில் அவரின் கீழ் விளையாட ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியின் கேப்டன்ஷிப் கீழ் விளையாட ஒவ்வொரு வீரர்களும் ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது குஜராத் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள நான் அந்த அணிக்கு விளையாட பெருமைப்படுகிறேன்.
தற்போது குஜராத் அணிக்கு வந்துள்ள நான் எனது சிறப்பான செயல்பாடுகளால் அந்த அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுப்பேன். குஜராத் அணிக்காக விளையாடுவதை கௌரவமாக நினைக்கிறேன். மேலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். அவர் முதல் முறையாக இப்போதுதான் ஒரு அணியை வழி நடத்துகிறார் என்பதால் இந்த வாய்ப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறினார்.
ஐபிஎல் உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் நடைபெறும் டி20 தொடர்களில் பங்கேற்று உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக கருதப்படும் ஆப்கானிஸ்தானின் ரசித் கான் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 15 கோடிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் கடந்த பல வருடங்களாக ஹைதராபாத் அணிக்காக அபாரமாக செயல்பட்டு 76 போட்டிகளில் 93 விக்கெட்டுகளை 6.33 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார்.
இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் மிக துல்லியமாக (6.33 எக்கனாமி) பந்துவீசி வரும் பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவரை ஹைதராபாத் அணி நிர்வாகம் கழட்டி விட்டுள்ளதால் இம்முறை இதற்கு முன் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இருப்பினும் எம்எஸ் தோனியின் கீழ் விளையாடுவது தமது நீண்ட நாள் கனவாக இருப்பதாகவும் அவர் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.
இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நான் உலகின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு வித்தியாசமான கேப்டன்களின் தலைமையில் விளையாடி உள்ளேன். அதேப்போல் எனது தாய் நாட்டுக்காக கேப்டனாகவும் விளையாடி உள்ளேன். எனவே அந்த அனுபவத்தையும் நுணுக்கங்களையும் வைத்து புதிய கேப்டனாக செயல்படும் ஹர்திக் பாண்டியாவுக்கு உதவுவேன். எனவே அவருடன் விவாதித்து ஒன்றுபட்டு செயல்படுவதற்கான தருணங்களை ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறினார்.