2023 உ.கோ செமி ஃபைனலில் விளையாடப் போகும் 4 அணிகள் இவை தான் – இயன் மோர்கன், க்ளன் மெக்ராத் கணிப்பு

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தற்போது முழுவதுமாக இத்தொடரை தங்களது சொந்த மண்ணில் நடத்த உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்க உள்ளன. அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

சொல்லப்போனால் மற்ற அணிகளை காட்டிலும் 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை சொந்த மண்ணில் நிறுத்தி வெற்றி காண வேண்டும் என்ற எக்ஸ்ட்ரா அழுத்தத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது. அது போக அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தும் அணியாக திகழும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஐசிசி தொடர்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்த 5 கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலியா காலம் காலமாக தோல்விகளை மட்டுமே பரிசளிக்கும் நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

செமி ஃபைனல் அணிகள்:
மேலும் தங்களைப் புறக்கணிக்கும் இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தானும் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல தென்னாபிரிக்காவும் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுடன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றை கடந்து கோப்பையை முத்தமிடுவதற்கான வாய்ப்பையும் கொடுக்கும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் கணித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா அந்த 4 அணிகளில் ஒன்றாக இருக்கும் என்று நான் பட்டியலிடுவதை பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். அதே போல இந்தியா தங்களுடைய சொந்த மண் சூழ்நிலைகளில் விளையாடுகிறது. அவர்களை தவிர்த்து இங்கிலாந்து தற்போது மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் நிலையில் பாகிஸ்தானும் சிறப்பாக செயல்படுகிறது. எனவே இந்த 4 அணிகள் அந்த இடத்தை தொடும்” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல இங்கிலாந்தை அதிரடி படையாக மாற்றி மறுமலர்ச்சியை ஏற்படுத்தி நடப்பு சாம்பியனாக ஜொலிக்க வைத்த முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் தங்களுடைய அணியும் சொந்த மண்ணில் இந்தியாவும் இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக கணித்துள்ளார். மேலும் வெற்றிகரமான ஆஸ்திரேலியா மற்றும் தரமான பந்து வீச்சை கொண்டுள்ள பாகிஸ்தான் ஆகிய அணிகளும் செமி ஃபைனலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இந்த தொடரின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து ஒரு அணியாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதே போல இந்தியாவும் அங்கே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இவைகளை தவிர்த்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் கோப்பையை வெல்வதற்கான திறமையை கொண்டுள்ளன. எனவே இந்த மிகப்பெரிய போட்டி நிறைந்த தொடரில் நான் குறிப்பிட்ட முதலிரண்டு அணிகள் கோப்பையை வெல்வதற்கு வலுவான அணிகளாகவும் எஞ்சிய 2 அணிகள் சவாலை கொடுக்கும் அணிகளாகவும் இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs WI : 2 ஆவது டி20 போட்டியில் இஷான் கிஷனுக்கு பதில் அவரை ஓப்பனரா விளையாட வையுங்க – வாசிம் ஜாபர் கருத்து

முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களையும் இந்தியாவின் கால சூழ்நிலைகளையும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். அதன் காரணமாக இத்தொடரில் சொந்த மண் சாதகம் என்பது பெயருக்காக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாதல் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்தியா கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement