சுமாரான பார்ம் எதிரொலி, ஓய்வு பெறப்போகும் இங்கிலாந்து ஸ்டார் வீரர் – வெளியான அதிர்ச்சி தகவல்

England
- Advertisement -

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து பல தரமான வீரர்கள் இருந்த போதிலும் சிறப்பான கேப்டன்கள் வழி நடத்திய போதிலும் கடந்த பல வருடங்களாக உலக கோப்பை எனும் மாபெரும் வெற்றிக் கனியை பறிக்க முடியாமல் திணறி வந்தது. 1975, 1979, 1983, 1999 என 4 உலகக் கோப்பைகளை தனது சொந்த மண்ணில் நடத்திய போதிலும் அதை எதிரணிகளுக்கு பரிசளிக்க முடிந்ததே தவிர அந்த அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாத பரிதாப நிலை இருந்து வந்தது. உலக கோப்பையை விடுங்கள் சாதாரண இருதரப்பு தொடரிலேயே பெரும்பாலான தருணங்களில் மண்ணைக் கவ்விய அந்த அணி ஒருநாள் கிரிக்கெட்டில் ரொம்பவே தடுமாறிக் கொண்டிருந்தது.

INDvsENG

- Advertisement -

அப்போது அயர்லாந்தில் பிறந்து அந்நாட்டுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்து பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து விடிவெள்ளியாக வந்த இயன் மோர்கன் 2009இல் அந்நாட்டுக்காக முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஒரு சாதாரண வீரராக வழக்கம்போல 3 வகையான இங்கிலாந்து அணிக்கும் விளையாடிய அவர் 2014இல் வெள்ளை பந்து கிரிக்கெட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

2019 உலககோப்பை நாயகன்:
ஆனால் எடுத்த எடுப்பிலேயே மிகப்பெரிய சறுக்கலாக 2015 உலகக் கோப்பையில் வங்கதேசத்திடம் காலிறுதியில் தோல்வியடைந்து மிகப்பெரிய அவமானத்துடன் அவரது தலைமையில் இங்கிலாந்து வெளியேறியது. அதற்காக மனம் தளராத அவர் இனிமேல் தடுப்பாட்டம் வேலைக்காகாது என்று உணர்ந்து அதிரடி ஆட்டம் மட்டுமே வெற்றியையும் உலக கோப்பையையும் வென்று கொடுக்கும் என்று நம்பி அதற்கான வேலைகளில் ஈடுபட்டார். அதனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியை மட்டுமே விரும்பக்கூடிய ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் போன்ற வீரர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவும் வாய்ப்பையும் கொடுத்து அவர் 2015 உலகக் கோப்பைக்கு பின் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இங்கிலாந்தை அசுரனை போல மாற்ற முக்கிய பங்காற்றினார்.

Eng-1

அதனால் சொந்த மண்ணுக்கு வரும் அணிகளையெல்லாம் புரட்டி எடுத்து பெரும்பாலான போட்டிகளில் 400 ரன்களுக்கு அசால்டாக குவித்த அந்த அணி இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அற்புதமாக விளையாடியது. அதன் பயனாக 2019 உலக கோப்பையில் முதல் முறையாக சொந்த மண்ணில் அவரது தலைமையில் அதே அதிரடியை பின்பற்றிய இங்கிலாந்து முதல் உலக கோப்பையை வென்று மாபெரும் சாதனை படைத்தது.

- Advertisement -

காயம் – சுமாரான பார்ம்:
அதனால் அயர்லாந்தில் பிறந்து இங்கிலாந்துக்காக முதல் உலக கோப்பையை வென்ற கேப்டன் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரரான இயன் மோர்கன் தலைமையில் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள டாப் 3 உலக சாதனை ஸ்கோர்களையும் இங்கிலாந்து எடுத்துள்ளது. அதனால் அந்நாட்டு ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்த அவர் சமீபகாலங்களில் பெரிய அளவில் ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். குறிப்பாக 2021க்கு பின் 5 ஒருநாள் போட்டிகளில் வெறும் 103 ரன்களை 25.75 என்ற மோசமான சராசரியில் எடுத்த அவர் 43 டி20 போட்டிகளில் 643 ரன்களை 17.86 என்ற படுமோசமான சராசரியில் எடுத்து பார்மின்றி தவித்து வருகிறார்.

England Australia

இதுபோக இடையிடையே காயங்களால் அவதிப்பட்டு வரும் அவர் சமீபத்திய நெதர்லாந்து தொடரில் கூட முதல் போட்டியில் டக் அவுட்டான கையுடன் காயமடைந்து எஞ்சிய 2 போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதே காரணத்தால் 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் கேப்டனாக இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்று அவரை 2022இல் அந்த அணி நிர்வாகம் கழட்டி விட்டது.

- Advertisement -

விலகும் மானஸ்தன்:
இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் இயன் மோர்கன் ஓய்வு பெறப்போவதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஒரு வருடமாகியும் முழுமையாக காயத்திலிருந்து குணமடைய முடியாத அவர் அதன் காரணமாகவே ரன்கள் எடுக்க முடியாமல் சுமாரான பார்மில் தவிக்கிறார்.

இதையும் படிங்க : இதே வேலையா போச்சு, பேசாம ரோஹித் டி20 கேப்டன்ஷிப் பொறுப்பை விடலாம் – முன்னாள் ஜாம்பவான் ஆலோசனை

அதனால் அணிக்கு பாரமாக மாற விரும்பாமல் மானஸ்தனை போல் 35 வயதிலேயே ஓய்வு எடுக்கும் முடிவை எடுத்து விட்டதாக தெரிவிக்கும் இங்கிலாந்தின் பிரபல கார்டியன் பத்திரிக்கை இதுபற்றி இன்னும் ஒருசில நாட்களில் அவரே அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. மேலும் அடுத்த கேப்டனாக ஜோஸ் பட்லர் அறிவிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement