இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் நடைபெறும் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு கருணரத்னே 2, மதுசங்கா 4, ஏஞ்சேலோ மேத்தியூஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 6/3 என ஆரம்பத்திலேயே திண்டாடிய இலங்கைக்கு நிதானமாக விளையாட முயற்சித்த குசால் மெண்டிஸ் 24 ரன்களில் மார்க் வுட் வேகத்தில் அவுட்டானார். அதே போல கமிண்டு மெண்டிஸ் 12, பிரபத் ஜெயசூர்யா 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அசத்தும் இங்கிலாந்து:
அதனால் 113/7 எனத் தடுமாறிய இலங்கை 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய தனஞ்செயா டீ சில்வா 8 பவுண்டரியுடன் அரை சதமடித்து 74 (84) ரன்கள் குவித்தார். அதே போல 9வது இடத்தில் அசத்திய மிலன் ரத்னநாயகே இங்கிலாந்து பவுலர்களை கடுப்பேற்றி அபாரமாக பேட்டிங் செய்து அரை சதமடித்து 72 ரன்கள் குவித்தார்.
அதனால் ஓரளவு தப்பிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மறுபுறம் பந்து வீச்சில் நன்றாகவே செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3, சோயப் பசீர் 3, கஸ் அட்கின்ஷன் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய முதல் நாள் முடிவில் 22/0 ரன்கள் எடுத்துள்ளது.
வீணான 4 ஓவர்கள்:
குறிப்பாக மாலை நேரத்தில் இலங்கை அணிக்கு வழக்கமான புதிய பந்து கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இலங்கை கேப்டன் தனஞ்செயா டீ சில்வா அதை வேகப்பந்து வீச்சாளர்களிடம் கொடுக்கவில்லை. மாறாக ஸ்பின்னர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்து தாமே 2 ஓவரை போட்ட அவர் மற்றொரு ஸ்பின்னரான ஜெயசூர்யாவிடம் 2 ஓவரையும் கொடுத்தார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து, ஆஸிக்காக மறந்து போனதை இந்திய அணியில் மீண்டும் கொண்டு வருவேன்.. கோச் ரியான் பேட்டி
பொதுவாக புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓரளவு நன்றாக வீசினாலே ஸ்விங் ஆகி விக்கெட்டுகள் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு ஏற்படும். இருப்பினும் அந்த முடிவை எடுக்காத இலங்கை கேப்டன் டீ சில்வா முதல் நாளில் வீசிய 4 ஓவர்களையும் ஸ்பின்னர்களை வைத்து முடித்தார். மறுபுறம் அந்த முடிவுக்கு மிக்க நன்றி என்பது போல் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்தின் பென் டக்கெட் 13* (12) ரன்களும் டான் லாரன்ஸ் 9* (12) ரன்களும் எடுத்து களத்தில் உள்ளார்கள்.



