36/3 என டாப் ஆர்டரை காலி செய்த அஸ்வின்.. அடம் பிடித்து குழியில் விழுந்த இங்கிலாந்து.. இந்தியா இன்றே சாதிக்குமா?

- Advertisement -

தரம்சாலாவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. மார்ச் 7ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சுமாராக விளையாடி 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 57, கேப்டன் ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110, தேவ்தூத் படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் 15 வருடங்கள் கழித்து ஒரு இன்னிங்ஸில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 15, ஜுரேல் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் குல்தீப் யாதவ் 30, பும்ரா 20 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

மிரட்டும் அஸ்வின்:
அதனால் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்து அசத்திய நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயா பஷீர் 5, டாம் ஹார்ட்லி, 2 ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 229 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு இரண்டாவது ஓவரிலேயே பென் டக்கெட்டை 2 ரன்களில் அவுட்டாக்கிய அஸ்வின் அடுத்த சில ஓவர்களில் மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லியை 0 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.

அதோடு நிறுத்தாத அஸ்வின் அடுத்ததாக வந்த ஓலி போப்பையும் 19 ரன்களில் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே இங்கிலாந்தின் டாப் ஆர்டரை சரித்தார். அதனால் 36/3 என தடுமாறிய இங்கிலாந்துக்கு அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோர் ரூட் நிதானமாக விளையாடினார். இருப்பினும் எதிர்ப்புறம் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்க விட்டு சவாலை கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் தன்னுடைய 100வது போட்டியில் மீண்டும் அதிரடியாக விளையாடுவேன் என்று அடம் பிடித்து சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்படாத அவரை குல்தீப் யாதவ் 39 (31) ரன்களில் காலி செய்தார். அப்போது வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸை நீண்ட நேரம் விடாத அஸ்வின் 2 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கி அனுப்பி வைத்தார். அதன் காரணமாக மூன்றாவது நாள் உணவு இடைவேளையில் 103/5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள இங்கிலாந்து இன்னும் இந்தியாவை விட 156 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இதையும் படிங்க: அவங்களும் மனுஷங்க தான்.. ரோபோ இல்ல.. இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக – அலைஸ்டர் குக் பேசியது என்ன?

தற்போதைய நிலையில் ஜோ ரூட் களத்தில் 34* ரன்களுடன் போராடி வருகிறார். ஆனால் எதிர்ப்புறம் வரும் வீரர்கள் அதிரடியாக விளையாடுவோம் என்று அடம் பிடிப்பதால் இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் வைத்துள்ள இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்விக்கான குழியில் விழுந்து மீண்டு வர போராடுகிறது. மறுபுறம் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ள அஸ்வின் இன்றே இங்கிலாந்தை சுருட்டி இந்தியாவை தனது 100வது போட்டியில் வெற்றி பெற வைப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement