இந்தியாவுடனான தோல்வி காரணமா? ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து நட்சத்திரம் திடீரென ஓய்வு – ரசிகர்கள் அதிர்ச்சி

Stokes
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுமாராக செயல்பட்ட இங்கிலாந்து 2 – 1 (3) என்ற கணக்கில் 2014 பின் முதல் முறையாக தொடரை இழந்து தலைகுனிந்துள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 378 ரன்களை அசால்ட்டாக சேசிங் செய்து வரலாற்று வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது.

அந்த நிலைமையில் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயன் மோர்கன் ஓய்வு பெற்றதால் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையில் அடுத்ததாக நடந்த டி20 தொடரில் களமிறங்கிய இங்கிலாந்து இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் திரும்பியதும் அபாரமாக செயல்பட்ட இந்தியாவிடம் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அதன்பின் நடந்த ஒருநாள் தொடரில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ போன்ற முக்கிய வீரர்கள் இணைந்த போதிலும் மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

- Advertisement -

ஸ்டோக்ஸ் ஓய்வு:
இந்த நிலைமையில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களுக்கும் மாபெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த 2011இல் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டின் வாயிலாக சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர் அடுத்த சில மாதங்களில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டதால் 2013இல் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்த தொடங்கிய அவர் அடுத்த சில வருடங்களில் 3 வகையான இங்கிலாந்து அணியிலும் அபாரமாக செயல்பட்டு உலக அளவில் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார்.

2016இல் இந்திய மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் கார்லஸ் ப்ரத்வைட்க்கு எதிராக 4 சிக்ஸர்களை வாரி வழங்கி உலக கோப்பையையும் தாரை வார்த்த அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்த போதிலும் அதிலிருந்து மீண்டெழுந்து 2019இல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து முதல் முறையாக உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பணிச்சுமையால்:
குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 84 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் 104 ஒருநாள் போட்டிகளில் 2919 ரன்களை 39.44 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். சமீபத்தில் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர் நடைபெற்று முடிந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0, 21, 27 என சொற்ப ரன்களில் அவுட்டானார். அதனால் நெருக்கமான அட்டவணைக்கு மத்தியில் ஒருநாள் போட்டிகள் தற்போது தமக்குப் பொருத்தமாக இல்லை என்பதை உணர்ந்த அவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அதிலும் ஜூலை 19-ஆம் தேதியான நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக துவங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தனது சொந்த ஊரான துர்ஹாம் நகரில் நடைபெற உள்ளதால் அப்போட்டியுடன் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெறுவதாகவும் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் அறிவித்துள்ளது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வுபெற முடிவெடுத்துள்ளதால் என்னுடைய கடைசி போட்டியை நாளை விளையாடுகிறேன். இது கடினமான முடிவு என்றாலும் இங்கிலாந்துக்காக சக வீரர்களுடன் இணைந்து விளையாடியதில் மகிழ்ச்சியடைகிறேன்”

- Advertisement -

“ஒருநாள் கிரிக்கெட்டில் என்னுடைய 100% பங்களிப்பை கொடுக்க முடியவில்லை என உணர்வதால் இந்த கடினமான முடிவை எடுக்கிறேன். நெருக்கமான கால அட்டவணைக்கு ஏற்றவாறு என்னுடைய உடல் ஒத்துழைக்கவில்லை. மேலும் ஜோஸ் பட்லர் போன்ற வீரர்களின் இடத்தை கெடுப்பதாகவும் நான் கருதுகிறேன். எனவே ஏற்கனவே 11 வருடங்கள் சிறப்பாக விளையாடி நிறைய நினைவுகளை பெற்றுள்ள நான் மற்றொரு சிறந்த வீரருக்கு வழி விடுகிறேன். இருப்பினும் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க உள்ளேன்”

“என்னுடைய சொந்த மண்ணில் கடைசி போட்டியில் விளையாடுவது அற்புதமான உணர்வாக இருக்கப் போகிறது. இந்த காலங்களில் எனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும் சக வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வாரியத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கடைசி போட்டியில் வென்று தொடரில் முன்னிலை பெறுவோம் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs ENG : வெற்றி பெற்றாலும் இதை சரிசெய்யாலைனா பின்னாடி பிரச்சனையாகிடும் – கேப்டன் ரோஹித்துக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை

உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக கருதப்படும் பென் ஸ்டோக்ஸ் 31 வயதிலேயே இப்படி பணிச்சுமையால் ஓய்வு பெற்றுள்ளது அதிர்ச்சியாக அமைந்தாலும் அவரின் இந்த முடிவை மதித்து ஏராளமான ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement