இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூலை 17-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்க மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் 45.5 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் ஜேசன் ராய் 41 (31), பென் ஸ்டோக்ஸ் 27 (29), மொய்ன் அலி 34 (44), லிவிங்ஸ்டன் 27 (31) என முக்கிய பேட்ஸ்மென்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்காத அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 60 (80) ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும், சஹால் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1 (3) ரோஹித் சர்மா 17 (17) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி 17 (22) ரன்களிலும் சூரியகுமார் யாதவ் 16 (28) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.
போராட்ட வெற்றி:
அதனால் 72/4 என தோல்வியின் பிடியில் வலுவாக சிக்கிய இந்தியாவை 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் பொறுப்புடன் விக்கெட்டை விடாமல் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்களைக் குவித்தனர். சுமார் 18 ஓவர்கள் நங்கூரத்தை போட்டு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த அந்த ஜோடியில் 10 பவுண்டரியுடன் 71 (55) ரன்களில் வெற்றி உறுதி செய்து பாண்டியா ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் சிம்ம சொப்பனமாக மாறிய ரிஷப் பண்ட் கடைசி வரை அவுட்டாகாமல் 16 பவுண்டரி 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 125* (113) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்ததால் 42.1 ஓவரில் இந்தியா 261/5 ரன்களை எடுத்தது. இதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்ற இந்தியா வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்து அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு சதமடித்த ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருதையும் தொடர் முழுவதும் அசத்திய ஹர்திக் பாண்டியா தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
சொதப்பிய டாப் ஆர்டர்:
பொதுவாக எந்த ஒரு போட்டியிலும் பெரிய ரன்களை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் இப்போட்டியில் ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய 3 அனுபவம் வாய்ந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியின் பிடியில் சென்ற இந்தியாவை நல்ல வேளையாக பண்ட் – பாண்டியா போராடி காப்பாற்றினார்கள்.

ஆனால் இப்போது வெற்றி பெற்றாலும் வருங்காலங்களில் உலக கோப்பை போன்ற தொடர்களில் டாப் ஆர்டர் சொதப்புவது ஆபத்தானது என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் எச்சரித்துள்ளார். ஆரம்ப காலங்களில் மிரட்டிய இவர்கள் சமீப காலங்களில் தடுமாறும் பிரச்சனையை உலக கோப்பைக்கு முன்பாக சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர் இது பற்றி இப்போட்டி முடிந்தபின் பேசியது பின்வருமாறு.
“அந்த டாப் 3 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படும் போதெல்லாம் இந்தியாவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் அது கடந்த 2 போட்டிகளில் நடைபெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தற்சமயத்தில் விராட் கோலி தடுமாறுகிறார் என்றால் ஷிகர் தவான் திணறுகிறார். அதேபோல் நாம் நினைக்கும் அளவுக்கு ரோகித் சர்மாவும் தொடர்ச்சியாக செயல்படுவதில்லை. ஆனாலும் இந்த தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டது ரோகித் சர்மாவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல் 2017, 2019, 2021 ஆகிய வருடங்களில் நடந்த உலகக் கோப்பைகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய காரணத்தாலேயே இந்தியா தோல்வியடைந்தது. குறிப்பாக 2019 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் அவர்கள் சொதப்பியதால் தோனி – ஜடேஜாவின் போராட்டம் வீணானதை ரசிகர்கள் மறக்க முடியாது. இத்துடன் உலக கோப்பைக்கு முன்பாக லோயர் ஆர்டர் அதாவது 7, 8-வது இடத்தில் கணிசமாக ரன்களை சேர்க்க கூடிய பவுலரை இந்தியா வளர்க்க வேண்டும் என்றும் வாசிம் ஜாபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: IND vs ENG : உலகின் எல்லா இடங்களிலும் அடிக்கிறார், வருங்கால சூப்பர் ஸ்டாராக வருவார் – ரிஷப் பண்ட்டை பாராட்டும் 2 ஜாம்பவான்கள்
இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “8-வது இடத்தில் ஷார்துல் தாகூர் – தீபக் சஹர் போன்றவர்களை அணி நிர்வாகம் கொண்டு வரவேண்டும். அடுத்ததாக உலகக்கோப்பை வரவிருக்கும் நிலையில் அதற்கு முன்பாக பேட்டிங்கை மேலும் வலுப்படுத்த வேண்டும். இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்து வீசியதை போல் எப்போதும் செயல்பட்டால் அவரை இந்திய பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக பயன்படுத்தலாம்” என்று கூறினார்.



