இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 326/5 ரன்கள் குவித்து ஓரளவு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.
அப்போட்டியில் ஜெய்ஸ்வால் 10, கில் 0, படித்தார் 5 ரன்களில் அவுட்டானதால 33/3 என ஆரம்பத்திலேயே இந்திய அணி தடுமாறியது. ஆனால் அப்போது இத்தொடரில் முதல் முறையாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா சதமடித்து 131 ரன்களும் அறிமுக போட்டியில் அசத்திய சர்பராஸ்கான் அரை சதமடித்து 62 ரன்களும் குவித்து இந்திய அணியை மீட்டெடுத்தனர்.
இரக்கம் காட்டாதீங்க:
அவர்களுடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா தன்னுடைய சொந்த ஊரில் சதமடித்து 110* ரன்கள் குவித்து களத்தில் இன்னும் இருக்கிறார். தற்போதைய நிலையில் இன்னும் துருவ் ஜுரேல், அஸ்வின் ஆகிய 2 பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் இருப்பதால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 400 – 450க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் முதல் நாளில் 326 ரன்கள் குவித்த இந்தியாவை இரண்டாவது நாளில் 400 ரன்களுக்குள் இங்கிலாந்து கட்டுப்படுத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். அதை செய்த பின் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் ராஜ்கோட் மைதானத்தில் ஜடேஜா, ரோகித் போல இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் இரக்கமின்றி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி சதமடித்தால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இந்திய அணியின் லோயர் மிடில் ஆர்டரை விரைவில் இங்கிலாந்து முடிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு 2வது நாள் காலையில் இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியை 400 ரன்களுக்குள் அவர்கள் ஆல் அவுட் செய்ய வேண்டும். இந்தத் தொடர் முழுவதும் இந்தியா பேட்டிங்கில் சற்று சொதப்பலாக செயல்பட்டு வருகிறது. அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் எளிதாக தங்களுடைய விக்கெட்டை இங்கிலாந்துக்கு பரிசளித்தனர். இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா கேட்ச் தவற விட்ட பின் தன்னுடைய விக்கெட்டை எளிதாக கொடுக்க மறுத்தார்”
இதையும் படிங்க: மாபெரும் சாதனையுடன்.. குறைத்து எடை போட்ட ஜெஃப்ரி பாய்காட் முகத்தில் கரியை பூசிய ரோஹித் சர்மா
“இது போன்ற மைதானத்தில் முதல் இன்னிங்சில் அடிக்கும் ரன்கள் முக்கியம். இந்தியா ஏற்கனவே இரண்டு சதங்கள் அடித்து நன்றாக செயல்பட்டுள்ளது. எனவே இங்கிலாந்து பேட்டிங் செய்ய வரும் போது ரோகித் மற்றும் ஜடேஜாவை போலவே இரக்கமின்றி விளையாட வேண்டும். கடந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 20, 30, 40 போன்ற ரன்களை அடித்தனர். ஆனால் டெஸ்ட் போட்டியை வெல்ல நீங்கள் பெரிய சதங்கள் அடிக்க வேண்டும்” என்று ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கூறினார்.