ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் முதலிரண்டு போட்டிகளில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து தலைகுனியும் தோல்விகளை சந்தித்து விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால் அதிரடியாக விளையாடாமலேயே 22 வருடங்களாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்த தேவையற்ற டி20 ஆட்டத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு வழக்கமாக விளையாடி காப்பாற்றுமாறு நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் கேப்டன்கள் இங்கிலாந்தை விமர்சித்தனர்.
இருப்பினும் பாகிஸ்தானை 3 – 0 என்ற கணக்கில் கடந்த காலங்களில் தோற்கடித்தது போல இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து 3 – 2 (5) என்ற கணக்கில் இத்தொடரை வெல்வோம் என்று கேப்டன் ஸ்டோக்ஸ் 2வது போட்டியின் முடிவில் உறுதியாக தெரிவித்தார். அந்த நிலைமையில் ஜூலை 6ஆம் தேதி ஹெண்டிங்க்லே நகரில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் முறையாக தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 263 ரன்களுக்கு சுருண்டது.
வெல்லப்போவது யார்:
அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டை போல அதிரடியாக விளையாடிய சதமடித்து 118 (118) ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக 150க்கும் மேற்பட்ட கி.மீ வேகத்தில் மிரட்டலாக பந்து வீசிய மார்க் வுட் 5 விக்கெட்களை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 237 ரன்களுக்கு சுருண்டது. ஜோ ரூட் 19, ஜானி பேரஸ்டோ 12 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு மீண்டும் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதை தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் 1, ஸ்மித் 2 ரன்களில் அவுட்டானாலும் கவாஜா 43, லபுஸ்ஷேன் 33 ரன்கள் எடுத்ததால் 2வது நாள் முடிவில் 116/4 என்ற நல்ல நிலையில் இருந்தது. அந்த நிலைமையில் நேற்று நடைபெற்ற 3வது நாளில் 70% ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இருப்பினும் மாலை நேரத்தில் மழை வழி விட்டதால் துவங்கிய போட்டியில் சவாலை கொடுத்த டிராவிஸ் ஹெட்டை 77 ரன்களில் அவுட்டாக்கிய இங்கிலாந்து மிட்சேல் மார்ஷ் 28, அலெக்ஸ் கேரி 5 என இதர முக்கிய வீரர்களையும் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி ஆஸ்திரேலியாவை 224 ரன்களுக்கு சுருட்டி அசத்தியது.
அந்தளவுக்கு அட்டகாசமாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் மொயின் அலி மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 251 என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்துவதற்கு களமிறங்கிய இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 27/0 என்ற ஸ்கோருடன் விளையாடி வருகிறது. களத்தில் தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 9*, பென் டூக்கெட் 18* ரன்களுடன் இருக்கும் நிலையில் கடைசி 2 நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 224 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதை போல ஆஸ்திரேலியாவுக்கு 10 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
அதனால் நிச்சயம் இந்த போட்டியில் யாராவது ஒருவர் வெல்வது உறுதியாக பார்க்கப்பட்டாலும் கடைசி 2 நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து வானிலை மையம் தெரிகிறது. குறிப்பாக கடைசி நாளில் 90% மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதால் அதற்கிடையே திறமையை வெளிப்படுத்தி வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் இன்னும் 10 விக்கெட்டுகளை கைவசம் வைத்துள்ள இங்கிலாந்து நிச்சயம் வென்றால் மட்டுமே சொந்த மண்ணில் உயிருக்கு நிகராக கருதப்படும் ஆஷஸ் கௌரவத்தை காப்பாற்ற முடியும்.
இதையும் படிங்க:நாங்க வெஸ்ட் இண்டீஸ்க்கு எப்போ போனாலும். இந்திய அணியை அவர் வீட்டிற்கு அழைப்பார் – வெ.இ வீரர் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி
ஆனால் கடைசி இன்னிங்ஸில் 224 ரன்களை சாதாரணமாகவே துரத்துவது கடினமாக பார்க்கப்படும் நிலையில் ஈரப்பதமான சூழ்நிலைகளில் மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் ஆஸ்திரேலியா வெல்வதற்கும் சமமான வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஒருவேளை இப்போதும் சொதப்பி ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் நீங்கள் வேஸ்ட் என இங்கிலாந்தை விமர்சித்து தள்ளுவதற்கு அனைவரும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.