98/1 அங்கேயும் திணறலா.. ஏமாற்றிய ரிங்கு, சுதர்சன்.. இங்கிலாந்து லயன்ஸிடம் சறுக்கிய இந்தியா ஏ

IND A vs ENG L
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற உள்ள 2வது போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் இந்தியா வெற்றி காணுமா என்ற கவலை ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இத்தொடரை முன்னிட்டு ஏற்கனவே இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை தோற்கடித்த இந்தியா ஏ அசத்தல் வெற்றி கண்டது. அந்த நிலையில் அவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது பயிற்சி போட்டி பிப்ரவரி 1ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது.

- Advertisement -

இங்கேயும் திணறலா:
அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அவரை காலி செய்த மேத்தியூ போட்ஸ் அடுத்த சில ஓவர்களிலேயே தமிழக வீரர் சாய் சுதர்சனை 7 ரன்களில் அவுட்டாக்கி அழுத்தத்தை உண்டாக்கினார்.

அப்போது அடுத்ததாக நங்கூரமாக நின்று அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர்களான திலக் வர்மா 22 ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக வந்த ரிங்கு சிங் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். போதாகுறைக்கு குமார் குஸக்ரா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 82/5 என இந்தியா ஏ அணி தடுமாறியது.

- Advertisement -

இருப்பினும் அப்போது மறுபுறம் நங்கூரமாக நின்று போராடிய தேவ்தூத் படிக்கல் அரை சதமடித்து 65 (96) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சரண்ஸ் ஜெயின் 12 பவுண்டரியுடன் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்து 64 ரன்கள் எடுத்தார். இருப்பினும் இந்தியா ஏ அணியை 50.2 ஓவரில் வெறும் 192 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் மேத்தியூ போட்ஸ் 6, பிரிடான் கார்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இதையும் படிங்க: எங்களாலும் முடியும்.. டிராவிட், ரோஹித் சொன்னா போதும்.. அதை செய்ய தயாரா இருக்கோம்.. பரத் பேட்டி

அதைத்தொடர்ந்து விளையாடும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு கீட்டன் ஜென்னிங்ஸ் 17 ரன்களில் அவுட்டானாலும் அலெக்ஸ் லீஸ் 48*, ஒலிவர் ப்ரைஸ் 20* ரன்கள் எடுத்துள்ளனர். அதனால் முதல் நாள் முடிவில் 98/1 ரன்கள் எடுத்துள்ள அந்த அணி 94 ரன்கள் பின் தங்கியிருந்தாலும் 9 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருப்பதால் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. மறுபுறம் இங்கேயும் திணறலா என்று ரசிகர்கள் அதிருப்தியடையும் அளவுக்கு இந்தியா ஏ தடுமாறி வருகிறது.

Advertisement