- Advertisement -
உலக கிரிக்கெட்

பத்திரமா நாடு திரும்பனும்ல – சொந்த செலவில் புக்கிங் செய்த சமையல் காரருடன் பாகிஸ்தானுக்கு செல்லும் இங்கிலாந்து, நடந்தது என்ன

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அதைத்தொடர்ந்து அங்கேயே இருந்து 3 போட்டியில் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்படும் இங்கிலாந்து அடுத்ததாக நேராக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறது.

பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகிய புதிய கேப்டன் – பயிற்சியாளர் பொறுப்பேற்ற பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நியனாக மாறியுள்ள இங்கிலாந்து சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவை சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி தற்சமயத்தில் முரட்டுத்தனமான பார்மில் உள்ளது. தற்போது டி20 உலக கோப்பையும் வென்ற புத்துணர்ச்சியுடன் அங்கு பயணிக்கும் இங்கிலாந்து பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் சாய்த்து அடுத்த வருடம் தங்களது நாட்டில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற போராட உள்ளது.

- Advertisement -

சொந்த சமையல்காரர்:
முன்னதாக பாதுகாப்பு காரணங்களால் 2005க்குப்பின் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை மொத்தமாக நிறுத்திய இங்கிலாந்து ஒரு வழியாக கடந்த மாதம் அந்நாட்டிற்கு சென்றது. சுமார் 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு பயணித்த இங்கிலாந்து 7 போட்டிகள் கொண்ட மெகா டி20 தொடரில் பங்கேற்று 4 – 3 என்ற கணக்கில் தொடரை வென்றது. அந்த தெம்புடன் டி20 உலக கோப்பை ஃபைனலிலும் பாகிஸ்தானை தோற்கடித்து இங்கிலாந்து கோப்பையை வென்றது வேறு கதை. ஆனால் அந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்ற போது இங்கிலாந்து வீரர்களுக்கு தேவையான உணவை கொடுக்காத பாகிஸ்தான் வாரியம் தாங்கள் கொடுக்கும் உணவைத் தான் உண்ண வேண்டும் என்பதில் கராராக இருந்தது.

அதனால் அதிருப்தியடைந்த இங்கிலாந்தின் கேப்டன் மொயின் அலி 7வது போட்டியின் முடிவில் “கராச்சியில் உணவு சிறப்பாக இருந்தது. ஆனால் லாகூரில் கொடுக்கப்பட்ட உணவால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம்” என்று செய்தியாளர்கள் முன்னிலையில் உண்மையை போட்டுடைத்தார். அத்துடன் அதன் காரணமாக அந்த தொடரில் ஜேக் லீச் போன்ற சில இங்கிலாந்து வீரர்கள் வயிற்று பிரச்சனைகளை சந்தித்ததாகவும் அவர் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

முன்னதாக ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 24 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு சென்ற ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் இதே நிலைமை நேர்ந்ததாக அந்நாட்டு வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் தனது ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்படி சமீப காலங்களாகவே தங்களது நாட்டுக்கு வருமாறு சிவப்புக் கம்பளம் விரிக்கும் பாகிஸ்தான் வாரியம் வெளிநாட்டு வீரர்களுக்கு தேவையான உணவு உபசரிப்பில் இப்படி குளறுபடிகளை செய்வதால் இங்கிலாந்து வாரியம் அதிருப்தியடைந்துள்ளது.

அதனால் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து வீரர்களுக்காக சமைக்க பிரத்தியேக செஃப் எனப்படும் சமையல்காரரை சொந்த செலவில் அனுப்பி வைக்க அந்நாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளதாக பிரபல இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக தங்களது நாட்டின் பிரபல செஃப் ஓமர் மேஜினேவை இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணியின் பிரத்தியேக சமையல்காரராக அந்நாட்டு வாரியம் நியமிக்க முடிவெடுத்துள்ளது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணியினருக்கு தேவையான உணவுகளை சமைத்துக் கொடுத்து ஏற்கனவே இங்கிலாந்து விளையாட்டுத் துறையுடன் நல்ல நெருக்கம் கொண்டவராக இருப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த செய்தியை பார்க்கும் இதர நாட்டு ரசிகர்கள் உங்களை நம்பி உங்களது நாட்டுக்கு வரும் வெளிநாட்டினருக்கு எப்படி விருந்து படைத்து உபசரிக்க வேண்டும் என்பது கூட தெரியாதா என்ற வகையில் பாகிஸ்தான் வாரியத்தை சமூக வலைதளங்களில் வழக்கம் போல கலாய்த்து வருகிறார்கள்.

- Advertisement -