இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் 3வது போட்டியில் வென்ற இங்கிலாந்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்த நிலையில் 4வது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.
மழையால் தாமதமாக துவங்கிய அப்போட்டி இருதரப்புக்கும் தலா 39 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 39 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 312-5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு பில் சால்ட் 22, வில் ஜேக்ஸ் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
பழைய ஆஸ்திரேலியா:
இருப்பினும் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 63 (62) ரன்கள் குவித்தார். அதே போல மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய கேப்டன் ஹரி ப்ரூக் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 87 (58) ரன்கள் குவித்தார். அவருடன் ஜேமி ஸ்மித் 39 (28), லியாம் லிவிங்ஸ்டன் 3 பவுண்டரி 7 சிக்சருடன் 62* (27) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக அந்தப் போட்டியில் மிட்சேல் மார்ஷ் வீசிய 17வது ஓவரின் 5வது பந்தை ஹரி ப்ரூக் லெக் சைட் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். இருப்பினும் அது அவருடைய பேட்டில் எட்ஜ் வாங்கி பின்னோக்கி சென்றது. அதை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்லிஷ் கிட்டத்தட்ட தரையோடு தரையாக பிடித்தார்.
ஏமாற்றும் குணம்:
அப்போது ஆஸ்திரேலிய அணியினர் விக்கெட் கிடைத்து விட்டதாக நினைத்து கொண்டாடத் துவங்கினர். மறுபுறம் தாம் சரியான கேட்ச் பிடித்து விட்டதாக கிட்டத்தட்ட 2008 இந்திய டெஸ்ட் தொடரில் ரிக்கி பாண்டிங் சொன்னது போல ஜோஸ் இங்லிஷ் நடுவரிடம் கையை உயர்த்தி அவுட்டென உறுதியாகச் சொன்னார். அதனால் முதல் நடுவர் ஜோயல் வில்சன் அவுட் கொடுத்தார். இருப்பினும் பக்கவாட்டு நடுவர் உறுதியாக இல்லாததால் 3வது நடுவரை நாடினார்.
இதையும் படிங்க: தாக்கூர் செட்டாக மாட்டாரு.. பாண்டியா மட்டும் இதை செஞ்சா இந்தியாவை அசைக்க முடியாது.. ஹனுமா விஹாரி
அதை சோதித்துப் பார்த்த போது பந்து ஜோஸ் இங்லிஷ் கைகளுக்கு செல்வதற்கு முன்பாகவே தரையில் பட்டது தெளிவாக தெரிந்ததால் மூன்றாவது நடுவர் தீர்ப்பை மாற்றி வழங்கினார். அதைப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் நல்லவேளை டிஆர்எஸ் இல்லையென்றால் ஏமாந்திருப்போம் என்ற வகையில் மைதானத்திலேயே முழக்கமிட்டு இங்லிஷ்க்கு தெரிவித்தனர். அத்துடன் தற்போதைய ஆஸ்திரேலிய அணி புதிதாக இருந்தாலும் ஏமாற்றும் பழைய குணம் மட்டும் மாறவில்லை என்று ஜோஷ் இங்லிஷை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.



