எல்லாம் முடிந்தது என நினைத்த இங்கிலாந்து ரசிகர்கள் – மாற்றம், மறுமலர்ச்சியால் புதிய நம்பிக்கை

Stokes
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த நாடாக கருதப்படும் இங்கிலாந்து கடந்த சில வருடங்களாகவே தனது சொந்த விளையாட்டிலேயே படு மோசமான செயல்பாடுகளால் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. குறிப்பாக 2017இல் அலெஸ்டர் குக்கிற்கு பின்பு கேப்டனாக பொறுப்பேற்ற நட்சத்திரம் ஜோ ரூட் பேட்டிங்கில் ரன் மழை பொழிந்தாலும் கேப்டனாக களத்தில் எடுக்க வேண்டிய பல முக்கியமான முடிவுகளில் சுமாராக செயல்பட்டது தோல்விகளுக்கான காரணமென்று அப்பட்டமாக தெரிந்தது. அதிலும் தங்களது சொந்த மண்ணில் 2021இல் நடைபெற்ற வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற தவறிய அந்த அணி நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணிலேயே மண்ணைக் கவ்வும் அளவுக்கு தோல்வியை சந்தித்தது.

அத்துடன் கடந்த ஜனவரியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் 4 – 0 என்ற படுதோல்வியை சந்தித்த காரணத்தால் ஜோ ரூட் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் போர்க்கொடி உயர்த்தினர். அந்த கால கட்டங்களில் பெரும்பாலான போட்டிகளில் ஜோ ரூட் தவிர பேட்டிங்கில் இதர பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க தவறியதே அந்த தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஆண்டர்சன் – ப்ராட்:
ஆனால் அதை உணராத அந்நாட்டு தேர்வுக்குழுவினர் பந்துவீச்சில் தான் குறை என்பதை நினைத்து அதிலும் மூத்த வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரை அதற்கடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதிரடியாக நீக்கியது. இருப்பினும் அவர்கள் இருவருமே வயதானாலும் ஸ்டைல் மாறாமல் அற்புதமாக பந்து வீசி வருகின்றார்கள். சொல்லப்போனால் அந்த இருவரும் சேர்ந்து இங்கிலாந்துக்காக 900க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை ஜோடியாக எடுத்துள்ளார்கள். குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் வயது அதிகமாக அதிகமாக விக்கெட்டுகளை மலை போலக் குவித்து உலக சாதனை படைத்து வருகிறார்.

அந்த நிலைமையில் ரூட்டுக்கு கடைசி முறையாக கேப்டன்ஷிப் வாய்ப்பை வழங்கிய நிலையில் அதிலும் இங்கிலாந்து படுதோல்வியடைந்தது. இப்படி தொடர் தோல்விகள், தங்களது சூப்பர் ஸ்டார்களான ஆண்டர்சன் – பிராட் ஆகியோர் அதிரடியாக நீக்கம் என டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அடுத்தடுத்த பின்னடைவுகளை சந்தித்ததால் கதை முடிந்தது என்று அந்நாட்டு ரசிகர்கள் சோகத்துடன் இருந்ததனர். அதனால் இப்படியே விட்டால் சரிவராது என முடிவெடுத்து அந்நாட்டு வாரியம் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற போதிலும் கொடுத்த அழுத்தத்தால் ரூட் தாமாக முன்வந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

- Advertisement -

புதிய கூட்டணி:
முன்னதாக ஏற்கனவே ஆஷஸ் தோல்வியால் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட்டை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்திருந்தது. அத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்க முன்னாள் வீரர் ராப் கீ புதிய இங்கிலாந்து நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து ஏற்கனவே ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் 2017 முதல் துணை கேப்டனாக இருந்து ஆல்-ரவுண்டராக அசத்தி 2019 உலககோப்பை, 2019 ஹெண்டிங்லே டெஸ்ட் போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

அதைவிட டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டது அனைவரின் பாராட்டுகளை அள்ளியது. ஏனெனில் அவர் தலைமையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் பல உச்சங்களை கண்ட நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சரித்திர வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியை காட்டும் அவரின் பயிற்சியும் அதே போல் இருக்கும் என்பதால் அதிரடியை விரும்பும் பென் ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் கூட்டணி அதிரடியை கையிலெடுத்து இங்கிலாந்து கிரிக்கெட்டை மீட்டெடுக்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. 2015இல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இதேபோல இங்கிலாந்து தடுமாறிய போது இயன் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் அதிரடியை கையிலெடுத்த இங்கிலாந்து 2019இல் உலக கோப்பையை வென்று அசத்தியது.

ரசிகர்கள் மகிழ்ச்சி:
எனவே தற்போது வீழ்ந்து கிடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் அதிரடி தான் அவசியமாகவும் இருக்கிறது. அதனால் மகிழ்ச்சியடைந்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சி செய்தியாக வரும் ஜூன் 2-ஆம் தேதி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மீண்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : வருங்காலத்தில் அவங்க இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆளப்போறாங்க – சேவாக் பாராட்டிய இளம் வீரர்கள்

அத்துடன் ஏற்கனவே வலுவாக இருக்கும் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் கேப்டன் மோர்கனுக்கு உதவியாக ஆஸ்திரேலியாவின் மேத்தியூ மாட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் வீழ்ச்சியின் பலனாக தலைமையில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றங்கள் விரைவில் இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஒரு மறுமலர்ச்சி மிகுந்த வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் என்று அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement