ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து 2வது போட்டியிலும் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடி பாகிஸ்தான் போன்ற அணிகளை தார் ரோட் பிட்ச்களில் அடித்து நொறுக்கி பெற்ற போலியான தன்னம்பிக்கையால் முதல் போட்டியில் 393/8 ரன்கள் குவித்த இங்கிலாந்து தைரியமாக டிக்ளேர் செய்கிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டது.
அதனால் இந்த அதிரடியெல்லாம் மூட்டை கட்டி விட்டு வழக்கம் போல விளையாடுமாறு நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியிலும் 188/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்ற இங்கிலாந்து அதன் பின் ஆஸ்திரேலியா விரித்த ஷார்ட் பிட்ச் வலையில் நிதானத்தை வெளிப்படுத்தாமல் ஸ்டைலுக்காக விளையாடி 325 ரன்களுக்கு சுருண்டது தோல்வியை கொடுத்தது. அதன் காரணமாக இந்த மூளையற்ற பேட்டிங்கை தூக்கி எறிந்து விட்டு ஒழுங்காக வரலாற்றின் மிகப்பெரிய கௌரவமான ஆஷஸ் கோப்பையை வெல்லும் வழியை பார்க்குமாறு மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் மீண்டும் விமர்சித்தனர்.
அதிரடி முடிவு:
ஆனால் ஒரு தோல்விக்காக பின்வாங்காமல் இத்தொடர் முழுவதும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று முதல் போட்டியின் முடிவில் அறிவித்த பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் விடாப்பிடியாக நிற்கிறார். அவரைப் போலவே 2 – 0* (5) என்ற கணக்கில் பின் தங்கியிருந்தாலும் கடந்த காலங்களில் பாகிஸ்தானை 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்த உத்வேகத்துடன் அடுத்து வரும் போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு 3 – 2 (5) என இத்தொடரை வெல்வோம் என கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2வது போட்டியின் முடிவில் தெரிவித்தார்.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் முக்கியமான 3வது போட்டி ஜூலை 6 முதல் ஹெண்டிங்க்லே நகரில் நடைபெறுகிறது. அதில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இங்கிலாந்து தங்களுடைய விளையாடும் 11 பேர் அணியை இன்றே அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி முதலிரண்டு போட்டிகளில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்ட ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து அதிரடியாக கழற்றி வைத்துள்ளது.
அனுபவத்தால் கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற கிளன் மெக்ராத் ஆல் டைம் சாதனையை உடைத்து இந்தியாவின் அனில் கும்ப்ளேவை மிஞ்சியுள்ள அவர் ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் சாதனைகளையும் தகர்ப்பார் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படிப்பட்ட அவர் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஃபிளாட்டான பிட்ச்களில் மேகங்கள் இல்லாததால் ஸ்விங் செய்ய முடியாமல் திணறலாக செயல்பட்டது இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமானது.
சொல்லப்போனால் இதே போல ஃபிளாட்டான பிட்ச் இருந்தால் ஆஷஸ் தொடரில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கும் என்று முதல் போட்டிக்கு பின் ஆண்டரசன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும் 2வது போட்டியிலும் சுமாராகவே செயல்பட்டதால் அவரை அதிரடியாக நீக்கியுள்ள இங்கிலாந்து மார்க் வுட்டை விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்துள்ளது. அதே போல கடந்த போட்டியில் ஸ்பின்னரே வேண்டாம் என முடிவெடுத்து மொய்ன் அலிக்கு பதிலாக ஜோஸ் டாங்கை சேர்த்த அந்த அணியின் திட்டமும் வேலைக்காகவில்லை.
அதனால் மீண்டும் அவரை புறக்கணித்து 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த மொய்ன் அலியை 3வது போட்டியில் சேர்த்துள்ள இங்கிலாந்து காயத்தால் வெளியேறிய ஓலி போப்புக்கு பதிலாக கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. 3வது ஆஷஸ் போட்டிக்கான இங்கிலாந்து அணி இதோ:
இதையும் படிங்க:காயத்தால் ஆடாமலேயே ஜெயிச்சு மாபெரும் சாதனை படைத்த கேன் வில்லியம்சன் – 2023 உ.கோ பற்றியும் வெளியான ஹேப்பி நியூஸ் இதோ
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோ ரூட், ஹரி ப்ரூக், ஜாக் கிராவ்லி, பென் டூக்கெட், ஜானி பேர்ஸ்டோ மொயின் அலி, கிறிஸ் ஓக்ஸ், ஸ்டுவர்ட் ப்ராட், ஓலி ராபின்சன், மார்க் வுட்