டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஸ்டைல், உலகையே மிரட்டும் இங்கிலாந்து – இந்தியாவின் உலக சாதனையை உடைத்து புதிய சாதனை

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிரடியாக செயல்பட்ட இங்கிலாந்து 3 – 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற சரித்திரம் படைத்துள்ள இங்கிலாந்து கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் அந்த அணியை ஃபைனலில் தோற்கடித்து 2வது கோப்பை முத்தமிட்டு சாதனை படைத்தது. அதற்கு முன்பாக அக்டோபர் மாதம் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 4 – 3 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இங்கிலாந்து உலகையே திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

- Advertisement -

கிரிக்கெட்டை கண்டுபிடித்தாலும் ஆரம்ப காலங்களில் ரொம்பவே தடுமாறிய இங்கிலாந்து 2017இல் இயன் மோர்கன் வருகைக்குப் பின் என்ன ஆனாலும் அதிரடியாக விளையாடும் யுக்தியை பின்பற்றி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எதிரணிகளை துவம்சம் செய்து ஒரே நேரத்தில் 50 ஓவர் உலகக் கோப்பையையும் (2019) 20 உலக கோப்பையும் (2022) வென்ற அணியாக உலக சாதனை படைத்துள்ளது. அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜோ ரூட் தலைமையில் தடுமாறிய அந்த அணிக்கு கடந்த ஜூன் மாதம் அதிரடியை மட்டும் விரும்பக்கூடிய நியூஸிலாந்து ஜாம்பவான் ப்ரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராகவும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

புதிய உலக சாதனை:
அப்போது முதல் அதிரடியான அணுகு முறையை பின்பற்றிய இங்கிலாந்து முதலில் சொந்த மண்ணில் நியூசிலாந்தை 3 – 0 (3) என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவுக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட போட்டியிலும் மிரட்டலாக சேசிங் செய்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அதனால் “பஸ்பால்” என்று இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடிய அந்த அணியால் சொந்த மண்ணில் ஃப்ளாட்டான பிட்ச்களில் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் வெளிநாட்டு மண்ணில் சாதிக்க முடியாது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

Ben Stokes

போதாக்குறைக்கு அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து கிண்டல்களுக்கும் உள்ளானது. ஆனால் அதற்காக சளைக்காமல் அடுத்த 2 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை அடுத்து நொறுக்கி 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற இத்தொடரிலும் தார் ரோடு போல அமைக்கப்பட்டிருந்த பிட்ச்சை கொண்டிருந்த ராவல்பிண்டியிலும் சுழலுக்கு சாதகமாக இருந்த முல்தான், கராச்சி ஆகிய மைதானங்களிலும் அதே அதிரடி அணுகு முறையால் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

மொத்தத்தில் மெதுவாக விளையாட வேண்டிய இடத்தில் டி20 போல அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை உருவாக்க துவங்கியுள்ளது என்றே கூறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 89 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ள அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்ஸர்களை அடித்த அணி என்ற இந்தியாவின் உலக சாதனை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. இங்கிலாந்து : 89* (2022)
2. இந்தியா : 87 (2021)
3. நியூசிலாந்து : 81 (2014)
4. நியூசிலாந்து : 71 (2013)

Ben Stokes Jasprit Bumrah ENG vs IND

அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து சராசரியாக 5.50 என்ற ரன் ரேட்டில் அதிரடியாக விளையாடிய அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் ரேட்டில் ரன்களை குவித்த அணி என்ற தனது சொந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. இங்கிலாந்து : 5.50, பாகிஸ்தானுக்கு எதிராக, 2022*
2. இங்கிலாந்து : 5.13, வங்கதேசத்துக்கு எதிராக, 2004
3. தென்னாப்பிரிக்கா : 5.13, ஜிம்பாப்வேப்புக்கு எதிராக, 2005
4. ஆஸ்திரேலியா : 4.69, ஜிம்பாப்வேவுக்கு எதிராக, 2003

இதையும் படிங்க: வங்கதேச தொடருக்கு அழைத்து சென்று இளம் வீரரை அசிங்கப்படுத்திய பி.சி.சி.ஐ – ரசிகர்கள் கொதிப்பு

இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறித்தனமாக விளையாடும் இங்கிலாந்து உலகையே மிரட்டும் அணியாக மாறியுள்ளதால் அதை தடுத்து நிறுத்துவது இந்தியா உட்பட எதிரணிகளுக்கு கடினமாக மாறியுள்ளது.

Advertisement