Ashes 2023 : ஆஸியை மிரட்ட 85 வருட ஆஷஸ் சாதனையை தூளாக்கிய இங்கிலாந்து – ஆனாலும் விமர்சித்த கெவின் பீட்டர்சன், காரணம் என்ன

ENg vs AUS
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 தொடரில் ஜூன் 16ஆம் தேதியான நேற்று பர்மிங்காம் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு முதல் நாளிலேயே 393/8 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளை பெற்று வரும் அந்த அணி இந்த தொடரில் உங்களை பந்தாடுவோம் என்று ஆரம்பத்தில் எச்சரித்தது போலவே முதல் நாளிலேயே ஆஸ்திரேலியாவை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தது.

அந்த அணிக்கு பென் டூக்கெட் 12 ரன்களும் ஓலி போப் 31 ரன்களும் ஹரி ப்ரூக் 32 ரன்களும் எடுக்க தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 61 (73) ரன்களை குவித்து அசத்தினார். அவர்களை விட ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக 12 பவுண்டரியுடன் 78 (78) ரன்கள் எடுத்து அவுட்டானாலும் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நங்கூரமாகவும் ரிசர்வ் ஸ்கூப் போன்ற அதிரடியான ஷாட்டுகளையும் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 30வது சதத்தை பதிவு செய்து 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 118* (157) ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்துக் கொண்டிருந்தார்.

- Advertisement -

பீட்டர்சன் விமர்சனம்:
அப்போது 78 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டிருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென தங்களுடைய இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிவித்தார். அதனால் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் முதல் நாளிலேயே மிகவும் குறைந்த ஓவர்களில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த அணி என்ற ஆஸ்திரேலியாவின் 85 வருட சாதனையை தகர்த்த இங்கிலாந்து புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 1937ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 66 ஓவரிலேயே முதல் நாளில் தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

ஆனால் அப்போது 8 பந்துகளை கொண்டிருந்த ஓவர்கள் இருந்த நிலையில் தற்போது 6 ஓவர்கள் வீசப்படுவதால் பந்துகள் அடிப்படையில் (468) மிகவும் வேகமாக டிக்ளேர் செய்த அணியாக இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக கடைசி சில ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் சில விக்கெட்டுகளை எடுத்து ஆரம்பத்திலேயே அச்சுறுத்துவோம் என்ற எண்ணத்துடன் பென் ஸ்டோக்ஸ் எடுத்த அந்த தைரியமான முடிவு பாராட்டுகளுக்கு தகுந்த விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் களத்தில் ஜோ ரூட் போன்ற தரமான பேட்ஸ்மேன் நன்கு செட்டிலாகி இருந்த நிலையில் சமீபத்தில் இந்தியாவை தோற்கடித்த தரமான ஆஸ்திரேலியா பேட்டிங்கில் இங்கிலாந்தை விட அதிரடியாக விளையாடி பெரிய ரன்கள் குவிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதற்கேற்றார் போல் முதல் நாள் முடிவில் பென் ஸ்டோக்ஸ் நினைத்தது போல விக்கெட் விடாத ஆஸ்திரேலியா 14/0 ரன்களுடன் விளையாடி வருகிறது. அதன் காரணமாக தாமாக இருந்தால் டிக்ளேர் செய்திருக்க மாட்டேன் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பிபிசி தொலைக்காட்சியில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. இதற்கு முன் செய்யாத விஷயத்தை இங்கிலாந்து எதிரணிக்கு எச்சரிக்கையாக கொடுக்க முயற்சிக்கிறது. நான் கேப்டனாக இருந்தால் ஜோ ரூட் களத்தில் இருக்கும்போது இன்னும் சற்று அதிக ரன்களை குவிக்க முயற்சித்திருப்பேன். ஏனெனில் வார்னர், கவாஜா போன்ற அனுபவமிக்கவர்கள் சவாலை கொடுக்கலாம்” என்று கூறினார்.

- Advertisement -

அதே போல் கெவின் பீட்டர்சன் அதிருப்தியை வெளிப்படுத்தியது பின்வருமாறு. “தற்போதைக்கு பதில் சொல்வதற்கு எதுவுமில்லை. கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக மாறியதால் நீங்கள் அதை செய்திருக்கலாம். ஆனால் இப்போட்டியில் நாளை நல்ல வெயில் அடிக்கும் என்பதால் நான் டிக்ளேர் செய்வதை விரும்பவில்லை. குறிப்பாக 400 – 450 ரன்கள் எடுப்பது டெஸ்ட் போட்டியில் மனதளவிலும் போராடுவதற்கு முக்கியமான ஸ்கோராகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவங்க இப்படி பண்ணுவாங்கனு எனக்கு 2 நாளுக்கு முன்னாடியே தெரியும். டெஸ்ட் பைனல் குறித்து பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

ஆனால் முதல் நாள் மாலையில் வார்னர் விக்கெட்டை எடுக்கும் தன்னம்பிக்கையுடன் இங்கிலாந்து சரியான முடிவை தான் எடுத்துள்ளதாக மற்றொரு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisement