பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி முல்தானில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 556 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக கேப்டன் சான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102, ஆஹா சல்மான் 104* ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் லீச் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் பாகிஸ்தானை சரமாரியாக அடித்து 823-7 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக இங்கிலாந்து உலக சாதனை படைத்தது.
இங்கிலாந்து அபாரம்:
அதிகபட்சமாக ஜோ ரூட் 262, ஹரி ப்ரூக் 317 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நாசிம் சா, சாய்ப் ஆயுப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 267 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணிக்கு அப்துல்லா சபிக் 25, கேப்டன் மசூத் 11, பாபர் அசாம் 5, முகமது ரிஸ்வான் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் லோயர் மிடில் ஆர்டரில் ஆகாஷ் சல்மான் 63, அமீர் ஜமால் 55* ரன்கள் எடுத்துப் போராடியும் பாகிஸ்தான் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் காரணமாக இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
வரலாறு காணாத தோல்வி:
மறுபுறம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்த பாகிஸ்தான் கடைசியில் இன்னிங்ஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் “ஒரு போட்டியில் முதல் இன்னிங்ஸில் 500+ ரன்கள் அடித்தும் கடைசியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணி” என்ற மோசமான அவமான உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. வரலாற்றில் வேறு எந்த அணியும் இப்படி முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவித்த பின்பும் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததில்லை.
இதையும் படிங்க: முஷீர்கானுக்காக ரோஹித் சர்மா செய்த செயல்.. இதுதான் அவரோட குணம் – பாராட்டி தள்ளும் ரசிகர்கள்
இது போக சொந்த மண்ணில் கடந்த 1331 நாட்களாக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெல்ல முடியாமல் பாகிஸ்தான் திண்டாடி வருகிறது. அதனால் பாகிஸ்தான் அணி அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் அடித்தும் கடைசியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணியாக இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது.



