இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சர்ஃபராஸ் கானின் இளைய சகோதரர் முஷீர் கான் தற்போது 19 வயதே ஆகும் நிலையில் தேர்வுக்குழுவினர் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறார். ஏனெனில் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம் பிடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ரஞ்சி தொடரிலும் மும்பை அணிக்காக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தினார்.
முஷீர் கானை சந்தித்து ஆறுதல் கூறிய ரோஹித் சர்மா :
மும்பை அணி ரஞ்சி கோப்பையை இந்த ஆண்டு கைப்பற்ற அவரும் ஒரு முக்கியமான காரணமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு முஷீர் கான் முதிர்ச்சியான ஆட்டத்தை தற்போதே வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார். அதனை தொடர்ந்து துலீப் டிராபி தொடர், இந்திய ஏ அணி வாய்ப்பு என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
மேலும் வளர்ந்து வரும் வீரரான அவருக்கு இராணி கோப்பை தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இராணி கோப்பை தொடரில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை எதிர்த்து விளையாடிய மும்பை அணியில் இடம் பெற்றிருந்த அவர் அந்த போட்டிக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கினார். அதன் காரணமாக கழுத்தில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு அடுத்த சில மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விரைவில் 2024-25 ரஞ்சி டிராபி தொடர் துவங்க உள்ள வேளையில் முதல் சில போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்றாலும் அந்த தொடரின் பாதியில் அவர் மும்பை அணியில் இணைவார் என்று தெரிகிறது. இந்நிலையில் காயமடைந்து ஓய்வில் இருக்கும் முஷீர் கானை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேரில் சந்தித்து விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் தந்தையையும் நேரில் சந்தித்து பேசி இருந்தார். இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இப்படி தனது மாநில அணியை சேர்ந்த ஒரு இளம் வீரரை நேரில் சென்று வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இருந்தாலும் வளர்ந்து வரும் வீரரான அவர் விரைவில் இந்திய அணிக்காகவும் அறிமுகமாக வாய்ப்பு இருக்கும் வேளையில் அவரை நேரில் சந்தித்து ரோகித் சர்மா ஆறுதல் கூறியது ரசிகர்கள் மத்தியில் பாராட்டியினை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : ரசிகைக்கு நெகிழ்ச்சி பரிசு.. பயிற்சிக்கு போன இடத்தில்.. ரசிகர்களால் தெறித்து ஓடிய ரோஹித் சர்மா
இதுதான் ஒரு கேப்டனின் குணம் அணியில் இடம்பெறாத வீரராக இருந்தாலும் திறமையான ஒரு வீரர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது அவரை சந்தித்து ஆறுதல் கூறியது பெரிய விடயம் என ரசிகர்கள் ரோஹித் சர்மாவின் இந்த செயலை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.



