இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றது. குறிப்பாக கான்பூரில் 2 நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் 2வது போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய இந்தியா அட்டகாசமான வெற்றி பெற்றது.
அந்த வெற்றிக்கு சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்க வேண்டும் என்று அணுகுமுறையை பின்பற்றிய ரோஹித் சர்மா முக்கிய காரணமாக அமைந்தார். சொல்லப்போனால் அதே அணுகு முறையில் அவருடைய தலைமையில் விளையாடிய இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்றது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
ரசிகர்களின் அன்புத்தொல்லை:
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெற அந்த தொடரில் இந்தியா வெற்றி பெறுவது அவசியமாகிறது. அந்தத் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் அசத்துவதற்காக கேப்டன் ரோகித் சர்மா நேற்று மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பார்க் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டார்.
அதை அறிந்த அங்கிருந்த ரசிகர்கள் ரோஹித் சர்மாவின் பயிற்சியை பார்ப்பதற்காக சென்றனர். இறுதியில் பயிற்சியை முடித்து விட்டு வெளியே வந்த ரோஹித் சர்மாவுடன் ரசிகர்கள் வழக்கம் போல புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் நிறைய ரசிகர்கள் ஒன்று சேர்ந்ததால் அந்த இடத்தில் பரபரப்பும் நெரிசலும் ஏற்படுவது போன்ற சூழ்நிலை உருவானது.
ஓடிய ரோஹித் சர்மா:
அதனால் சிரமங்களை தடுப்பதற்காக அங்கிருந்து வேகமாக தெறித்து ஓடி வந்த ரோஹித் சர்மா தம்முடைய லம்போகினி காரில் ஏறுவதற்காக சென்றார். ஆனால் அங்கேயும் மற்றொரு தரப்பு ரசிகர்கள் புகைப்படம் எடுப்பதற்காக ரோஹித் சர்மாவை சூழ்ந்து கொண்டனர். இறுதியில் தம்முடைய உதவியாளர்கள் உதவியுடன் ரசிகர்களின் அன்பு தொல்லையைத் தாண்டி அங்கிருந்து ரோஹித் சர்மா காரில் ஏறிச் சென்றார்.
இதையும் படிங்க: பயத்துடன் காத்திருக்க மாட்டோம்.. இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தும் திட்டம் பற்றி நியூசிலாந்து கேப்டன் பேட்டி
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் மும்பை சாலையில் ரசிகையுடன் காரில் அமர்ந்து கொண்டவரே ரோஹித் சர்மா புகைப்படம் எடுத்துக்கொண்டார். மற்றொரு ரசிகர் அந்த ரசிகைக்கு பிறந்தநாள் என்று சொன்னார். உடனே அந்த ரசிகைக்கு கை கொடுத்த அவர் பிறந்தநாள் வாழ்த்து சொன்னார். அந்தளவுக்கு ரோஹித் சர்மா ரசிகர்கள் மீது அன்பு கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் நேற்று ரசிகர்கள் அதிகமாகக் கூடியதால் பிரச்சனை ஏற்படும் என்பதற்காகவே ரோஹித் சர்மா அப்படி செய்தது குறிப்பிடத்தக்கது.



