ENG vs BAN : டாஸ் வென்று தப்பு கணக்கு போட்ட வங்கதேச அணி.. பொளந்து கட்டிய இங்கிலாந்து – அசத்தல் வெற்றி

Reece Toply Liton Das.jpeg
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் அழகான தரம்சாலா நகரில் நடைபெற்ற 7வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. காலை 10.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 115 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜானி பேர்ஸ்டோ 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் வந்த ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்து மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் டேவிட் மாலன் 38 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று வங்கதேச பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 1 பவுண்டரி 5 சிக்ஸருடன் சதமடித்து 140 (107) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 20 (15) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 82 (68) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இங்கிலாந்து வெற்றி:
அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 0, ஹரி ப்ரூக் 20, சாம் கரன் 11 ரன்களில் அதிரடியாக விளையாடும் நோக்கத்தில் அவுட்டாகி சென்ற போதிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ஆரம்பகட்ட ரன் குவிப்பால் 50 ஓவர்களில் இங்கிலாந்து 364/9 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகிதி ஹசன் 4, சோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து 365 என்ற கடினமான இலக்கை துரத்திய வங்கதேசத்திற்கு ஒருபுறம் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் டன்சித் ஹசன் 1, நஜ்முல் சாண்டோ 0, கேப்டன் சாகிப் அல் ஹசன் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ரீஸ் டாப்லியின் வேகத்தில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். போதாகுறைக்கு அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் மெகதி ஹசனும் 8 ரன்களில் அவுட்டானதால் 49/4 என ஆரம்பத்திலேயே வங்கதேசம் திணறியது.

- Advertisement -

அப்போது அடுத்து வந்த அனுபவ வீரர் முஸ்பிக்கர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் முடிந்தளவுக்கு போராடி 5வது விக்கெட்டுக்கு 72ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 76 (66) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஹிமும் தம்மால் முடிந்தளவு போராடி 51 (64) ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் தவ்ஹீத் ஹ்ரிடாய் 39, மெகிதி ஹசன் 14, டைஜுல் ஹசன் 15 ரன்கள் எடுத்த போதிலும் 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேசம் வெறும் 227 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க: SL vs PAK : பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை சாதனை .. சங்கக்காராவை மிஞ்சிய மெண்டிஸ்.. கீப்பராக மாஸ் சாதனை

இங்கிலாந்து சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 4 விக்கெட்களையும் கிறிஸ் ஓக்ஸ் 2 விக்கெட்களையும் சாய்த்தனர். அதனால் 137 ரன்கள் இங்கிலாந்து தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்த நிலையில் வங்கதேசம் தங்களுடைய முதல் தோல்வியை பதிவு செய்தது. குறிப்பாக தரம்சாலா மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தும் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்யாமல் பந்து வீசியதை பயன்படுத்தி இங்கிலாந்து அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் குவித்து எளிதாக வென்றது.

Advertisement