IND vs ENG : 5வது டெஸ்டில் இந்திய ரசிகர்களுக்கு இங்கிலாந்து வாரியம் செய்யப்போகும் பெரிய மாற்றம்

INDvsENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று கடந்த வருடம் நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மடக்கிப் பிடித்து மண்ணை கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் அந்த சமயத்தில் கரோனா பரவல் ஏற்பட்டதால் மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5-வது போட்டியை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர்.

INDvsENG

- Advertisement -

அந்தத் தொடரின் கடைசி போட்டி தான் தற்போது மான்செஸ்டர் நகருக்கு பதிலாக பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளது. ஆனால் கடந்த முறை விராட் கோலி – ரவி சாஸ்திரி என்றிருந்த இந்திய தலைமை கூட்டணி தற்போது ரோகித் சர்மா – ராகுல் – டிராவிட் என்று மாறியுள்ளது. அதே போல் இங்கிலாந்து தரப்பிலும் ஜோ ரூட் – சில்வர்வுட் என்றிருந்த தலைமை பொறுப்பு தற்போது பென் ஸ்டோக்ஸ் – பிரண்டன் மெக்கலம் என்று புதிதாக மாறியுள்ளது.

இந்தியா வெல்லுமா:
இந்த மாற்றம் இந்தியாவுக்கு தான் மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது. ஏனெனில் கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையில் தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புத்துயிர் பெற்று அதிரடி வழியைப் பின்பற்றி தற்போது நியூசிலாந்துக்கு எதிராக அட்டகாசமாக விளையாடி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வலுவான அணியாக மாறியுள்ளது. எனவே இந்தப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் தலை நிமிர்வதற்கு அந்த அணி போராடும் என்பதால் இந்தியாவுக்கு வெற்றி சுலபமாக இருக்காது.

rohith 1

மறுபுறம் இந்திய தரப்பில் ஏற்கனவே இந்த தொடரில் பெற்ற 2 வெற்றிகள் உட்பட மொத்தம் 48 வெற்றிகளை பெற்று வெற்றிகரமான ஆசிய கேப்டனாக இருந்த விராட் கோலிக்கு அடுத்தபடியாக புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா இதுநாள் வரை சொந்த மண்ணில் இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் போன்ற கத்து குட்டிகளை எதிர்கொண்டு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்தார். எனவே முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் அதுவும் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறுவது அவருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கப் போகிறது. இதுபோக கேஎல் ராகுல் காயத்தால் விலகியுள்ளது, ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது போன்ற அம்சங்கள் இந்தியாவின் வெற்றியை மேலும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

- Advertisement -

நிகழும் மாற்றம்:
இந்நிலையில் இந்திய ரசிகர்களின் நேரத்தை கருத்தில் கொண்டு இந்த போட்டியை அரை மணி நேரம் முன்பாகவே அதாவது 3 மணிக்கே துவக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் பிரபல நாளிதழான டெய்லி மெயில் பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகியுள்ளது. பொதுவாக இங்கிலாந்தில் காலையிலேயே பனியால் நிலவும் ஈரப்பதத்தை தவிர்ப்பதற்காக உள்ளூர் நேரப்படி 11.00 மணிக்கு தான் டெஸ்ட் போட்டிகள் துவங்குகின்றன. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கும். கடந்த வருடமும் தற்போதைய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளும் இந்த நேரத்தில் தான் துவங்கின.

INDvsENG

ஆனால் இந்த நேரப்படி போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு முடிவடையும் நிலைமை ஏற்படுகிறது. அதுவும் 90 ஓவர்கள் வீச வேண்டும் என்பதற்காக அமபயர்கள் கூடுதல் நேரம் வழங்குவதால் பெரும்பாலான நாட்கள் இரவு 11 மணியை தாண்டி விடுகிறது. அதனால் கடைசி கட்ட பரபரப்பில் தருணங்களை குறிப்பிட்ட அளவிலான இந்திய ரசிகர்கள் பார்க்க முடியாத நிலைமை ஏற்படுகிறது. அதுவே தொலைக்காட்சி ஒளிபரப்பின் ரேட்டிங் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

இதையும் படிங்க : IND vs IRE முதல் டி20: மழையின் குறுக்கீட்டையும் தாண்டி அயர்லாந்தை தெறிக்கவிட்ட இந்தியா, வென்றது எப்படி – முழுவிவரம் இதோ

விரைவில் அறிவிப்பு:
அதை தவிர்ப்பதற்காக இம்முறை தொடராக அல்லாமல் ஒரு போட்டியாக மட்டுமே நடைபெறுவதால் இந்திய ரசிகர்களை கருத்தில் கொண்டு இந்த கடைசி போட்டி உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்க உள்ளதாக தெரிகிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு அரை மணி நேரம் முன்பாகவே துவங்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement