பும்ரா, கும்ப்ளே போல 1982க்குப்பின் ஸ்டோக்ஸ் சாதனை.. 123/9 என ஆஸியை பதிலுக்கு தெறிக்க விட்ட இங்கிலாந்து

Ben Stokes
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் நவம்பர் 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தை சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலியா 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.

அதிகபட்சமாக ஓலி போப் 46, ஹாரி ப்ரூக் 56, ஜேமி ஸ்மித் 33, பென் டக்கெட் 21 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை எடுத்து முதல் நாளிலேயே இங்கிலாந்தை தெறிக்க விட்டார். குறிப்பாக ஜோ ரூட்டை டக் அவுட்டாக்கிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்முடைய சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்து சாதனை படைத்தார்.

- Advertisement -

பதிலுக்கு தெறிக்க விடும் இங்கிலாந்து:

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு தாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை காண்பிக்கும் வகையில் இங்கிலாந்து பந்து வீசியது. குறிப்பாக முதல் ஓவரிலேயே துவக்க வீரர் ஜாக் வெதர்லாண்டை டக் அவுட்டாக்கிய ஜோப்ரா ஆர்ச்சர் மறுபுறம் நிதானமாக விளையாடிய மார்னஸ் லபுஸ்ஷேனையும் 9 ரன்களில் அவுட்டாக்கி தெறிக்க விட்டார்.

மிடில் ஆர்டரில் உஸ்மான் கவாஜா 2 ரன்னில் நடையைக் கட்டினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 17, டிராவிஸ் ஹெட் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். லோயர் ஆர்டரில் கேமரூன் கிரீன் 24, அலெக்ஸ் கேரி 26, மிட்சேல் ஸ்டார்க் 12 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் விக்கெட்டை இழந்தனர்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் சாதனை:

அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 123/9 என திணறி வருகிறது. களத்தில் நாதன் லயன் 3*, ப்ரெண்டன் 0* ரன்களுடன் உள்ள நிலையில் கைவசம் 1 விக்கெட்டை மட்டுமே வைத்துள்ள ஆஸ்திரேலியா இன்னும் 49 ரன்கள் பின்தங்கியுள்ளது. அதனால் நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அற்புதமான துவக்கத்தைக் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2008 மற்றும் 2025 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கேப்டன்கள் அனில் கும்ப்ளே, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பயிற்சியில் கூட அதை பார்க்காத இந்திய அணியை குறை சொல்லாதீங்க.. கம்பீர் கருத்தை சாடிய ரஹானே

அத்துடன் 43 வருடம் கழித்து ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையையும் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். கடைசியாக 1982 காபா போட்டியில் ஜாம்பவான் பாப் வில்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

Advertisement