தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது. அடுத்ததாக வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் இரண்டாவது போட்டியின் நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்குகிறது.
அப்போட்டியில் சிறப்பாக விளையாடி தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் சொந்த மண்ணில் இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அந்த படுதோல்விக்கு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்கள் அமைக்கப்பட்டதே முக்கிய காரணமாக மாறியது.
அணியை குறை சொல்லாதீங்க:
ஆனால் அதிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்காத இந்திய அணி மீண்டும் கொல்கத்தாவில் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியை சந்தித்தது. ஏனெனில் தாங்கள் தான் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். இருப்பினும் அதில் இந்திய வீரர்கள் நன்றாக விளையாடாததே தோல்விக்கு காரணமானதாகவும் கம்பீர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்போதெல்லாம் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் கூட சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் அமைக்கப்படுவதில்லை என்று முன்னாள் இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார். அதனால் வலைப்பயிற்சியில் கூட அப்படிப்பட்ட பிட்ச்சில் பயிற்சிகளை எடுக்காத இந்திய வீரர்களை தோல்விக்கு காரணமாக சொல்லாதீர்கள் என்றும் அவர் கம்பீரை சாடியுள்ளார். இது பற்றி ரகானே பேசியது பின்வருமாறு.
ரஹானே விமர்சனம்:
“டெஸ்ட் போட்டிகளில் நாம் சுழலுக்கு சாதகமான பிட்ச்க்களை அமைக்கிறோம். உங்களிடம் தரமான ஸ்பின்னர்கள் இருந்தால் அதை நீங்கள் செய்யலாம். ஆனால் அதில் பந்து எப்போது சுழல வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை முதல் நாளிலேயே சுழன்றால் நீங்கள் அதே போன்ற பிட்ச்களை உள்ளூர் கிரிக்கெட்டிலும் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அது போன்ற பிட்ச்களில் விளையாடப்போகும் உங்களுடைய வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டிலும் அதே போன்ற அனுபவத்தை விளையாடிப் பெற வேண்டும்”
இதையும் படிங்க: ஸ்பின் பிட்ச் அமைச்சுட்டா போதாது.. அவங்கள மாதிரி இந்தியாவுக்கும் 10 நாள் கேம்ப் போடுங்க.. ரஹானே விமர்சனம்
“சொல்லப்போனால் இப்போதெல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட ஃபிளாட் அல்லது வேகத்துக்கு சாதகமான பிட்ச்களே இருக்கிறது. ஒருசில சுழலுக்கு சாதகமான பிட்ச்களும் 3வது நாளிலிருந்து மட்டுமே சுழலத் துவங்கும். முதல் 2 நாட்கள் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும். ஸ்பின் பிட்ச்களில் விளையாட நீங்கள் வித்தியாசமாக தயாராக வேண்டும். எனவே நீங்கள் நமது வீரர்களை குறை சொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் வலைப்பயிற்சியில் கூட ஸ்பின் பிட்ச்களில் பயிற்சி எடுப்பதில்லை” என்று கூறினார்.



