IND vs ENG : இந்தியாவின் 15 வருட கனவை அடித்து நொறுக்கி ஓடவிட்ட இங்கிலாந்து, தோல்விக்கான காரணம் இதோ

ENg vs IND Jos Buttler Alex hales
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி சுற்றில் வலுவான இங்கிலாந்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது. அந்த நிலையில் நவம்பர் 10ஆம் தேதியன்று அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய 2வது அரையிறுதி போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தொடக்க வீரர் ராகுல் 5 (5) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் கைகோர்த்து 2வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரியுடன் 27 (28) ரன்களில் நடையை கட்டினார். அப்போது வந்த சூரியகுமார் யாதவ் வழக்கம் போல 1 பவுண்டரி 1 சிஸ்டருடன் அதிரடியை தொடங்கினாலும் திடீரென்று 14 (10) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 75/3 என தடுமாறிய இந்தியாவை பாண்டியாவுடன் 4வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் அரை சதமடித்து 50 (40) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

நொறுக்கிய ஓப்பனிங்:
அப்போது வந்த ரிஷப் பண்ட் 6 (4) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை நங்கூரமாக நின்று கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கிய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 63 (33) ரன்கள் விளாசி பினிஷிங் செய்து காப்பாற்றியதால் தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 168/6 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்களை எடுத்தார். அதன் பின் 169 ரன்களை துரத்திய அந்த அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய ஓப்பனிங் ஜோடி முதல் பந்திலிருந்தே இந்திய பவுலர்களை செட்டிலாக விடாமல் சரமாரியாக அடித்து நொறுக்கியது.

குறிப்பாக புவனேஸ்வர் குமாரின் முதலிரண்டு ஓவர்களில் 25 ரன்கள் தெறிக்க விட்ட அந்த ஜோடி பவர் பிளே முடிவில் 63 ரன்களை குவித்து ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்களை குவித்து இந்திய பவுலர்களை பந்தாடியது. இவர்களைப் பிரிக்க கேப்டன் ரோகித் சர்மா போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கிய இந்த ஜோடி 100 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது. மேலும் இவர்களுக்கு எதிராக எப்படி பந்து வீசலாம் என்று இந்திய பவுலர்கள் யோசிக்க முடியாத அளவுக்கு கருணையே காட்டாமல் கதற கதற அடித்த இந்த ஜோடி 16 ஓவர்களிலேயே 170/0 ரன்களை எடுக்க வைத்து இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற வைத்தது.

- Advertisement -

அதில் ஜோஸ் பட்லர் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 80* (49) ரன்களும் அலெக்ஸ் ஹேல்ஸ் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 86* (47) ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் 168 ரன்கள் குவித்த இந்தியாவுக்கு ஓப்பனிங் ஜோடி குறைந்தது 30 ரன்கள் கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் பவர்ப்ளே ஓவர்களில் எப்படி ஓப்பனிங் ஜோடி விளையாட வேண்டும் என்பதை இங்கிலாந்து ஜோடி நிரூபித்த நிலையில் இந்தியாவின் பந்து வீச்சும் அதை விட படுமோசமாக இருந்தது.

மொத்தத்தில் இந்தியாவின் சொதப்பலான ஓப்பனிங் பேட்டிங், மோசமான பவுலிங் மற்றும் சுமாரான ஃபீல்டிங் ஆகியன 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவை சுக்கு நூறாக உடைத்தது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. இதனால் இந்த உலகக் கோப்பையில் இருந்து பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா வெளியேறியது. மறுபுறம் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்ட இங்கிலாந்து இந்த வெற்றியால் நவம்பர் 13ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான மாபெரும் இறுதி போட்டியில் கோப்பைக்காக மோதுவதற்கு இங்கிலாந்து தகுதி பெற்றது.

Advertisement