ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது கடந்த ஜூன் 11-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு சுருண்டது.
கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள் :
ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் குவித்தனர். பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 138 ரன்களுக்கு சுருண்டது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக பெடிங்கம் 45 ரன்களையும், பவுமா 36 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 74 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரரேலிய அணி 207 ரன்கள் குவித்தது. அதன் காரணமாக 282 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் தற்போது தென்னாப்பிரிக்க அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இதன் காரனமாக இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா என 2 அணிகளை சேர்ந்த வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். அதற்கு காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் இப்படி இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாட காரணம் யாதெனில் : நேற்று இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் செல்ல இருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களை சந்தித்துள்ளனர். இந்த செய்தி உலகெங்கும் பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 59 ரன்ஸ்.. ஐசிசி ஃபைனலில் ஸ்டார்க் – ஹேசல்வுட் ஜோடி 50 வருட உலக சாதனை.. ஆஸியை காப்பாற்றி அபாரம்
இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். மேலும் மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கும் முன்னதாக 2 நிமிடம் மவுன அஞ்சலியையும் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.



