ஐபிஎல் 2022 : ரசிகர்களுக்கு விருந்து படைக்குமா மும்பை, புனே மைதானங்கள் – வெளியான 4 பிட்ச் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இம்முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் 60 போட்டிகளுக்கு பதில் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

ipl

- Advertisement -

இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இம்முறை இந்த தொடர் இந்தியாவிலேயே நடைபெற்றாலும் வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக வீரர்களின் நலன் கருதி மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை, புனேவில் ஐபிஎல் 2022:
குறிப்பாக வரும் மார்ச் 26 முதல் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுப் போட்டிகள் முழுவதும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில், ப்ராபோர்ன் மற்றும் எம்சிஏ ஆகிய 4 கிரிக்கெட் மைதானங்களில் மட்டும் நடைபெற உள்ளது. அதிலும் குறிப்பாக உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் 20 லீக் போட்டிகள், டிஒய் பாட்டில் மைதானத்தில் 20 போட்டிகள், நவிமும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் 15 போட்டிகள், புனே நகரில் இருக்கும் எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் 15 போட்டிகள் என மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் ஐபிஎல் 2020 தொடரின் 95% சதவீத போட்டிகள் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள மேற்குறிப்பிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளதால் அதில் பயன்படுத்தப்படும் பிட்ச்கள் எந்த மாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த வருடம் முதலில் இந்தியாவில் நடந்து அதன் பின் துபாயில் நடந்த ஐபிஎல் 2021 தொடரில் பெரும்பாலான போட்டிகள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் 20 ஓவர்களில் 140 ரன்களை தொடுவது என்பதே பெரிதாக இருந்தது.

- Advertisement -

பொதுவாக ஐபிஎல் தொடரை மைதானத்திலும் தொலைக்காட்சியிலும் பார்க்கும் ரசிகர்கள் அதிரடியான பவுண்டரிகளும், இமாலய சிக்ஸர்களும், பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த த்ரில் போட்டிகளை தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கடந்த வருடம் இந்தியா மற்றும் துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் ரசிகர்களுக்கு அலுப்புத் தட்டிய நிலையில் இந்த வருடம் மேற்குறிப்பிட்ட 4 மைதானங்களில் உள்ள பிட்ச்களை பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக கைகொடுக்கும் வகையில் தரமானதாக அமைக்க பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

IPL-1

குறிப்பாக ஒவ்வொரு போட்டி முடிந்த பின் அதற்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச்சுக்கு 1 வாரம் ஓய்வு அளிக்கும் வண்ணம் ஒரே மைதானத்தில் 5 வெவ்வேறு பிட்ச்கள் அமைத்து தரமான ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ வழி செய்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் 2020 தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெறும் 4 மைதானங்களின் பொதுவான பிட்ச் எப்படி இருக்கும் என்பது பற்றிய ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. வான்கடே மைதானம்: கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்ற இறுதிப் போட்டி நடந்த உலகப் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் இம்முறை 20 போட்டிகள் நடைபெற உள்ளது. குறிப்பாக ஓபனிங் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இதில் பயன்படுத்தப்படும் பிட்ச்கள் விசேஷம் நிறைந்த செம்மண்ணைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் பராமரிப்பாளர் ரமேஷ் மாமுன்கர் தெரிவித்துள்ளார்.

Javagal Sreenath Bengaluru Stadium

அதன் காரணமாக பந்து நல்ல அளவில் பேட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த மைதானத்தில் இயற்கையாகவே இருக்கும் சுழல் இந்த முறையும் ஸ்பின் பவுலர்களுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த மைதானம் அளவில் சிறியது என்பதால் விரைவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின்போது வான்கடே மைதானத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

2. டிஒய் பாட்டில் மைதானம்: கடந்த 2008 காலகட்டத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் தான் நடைபெற்றது. ஆனால் வான்கடே மைதானத்தில் புகழால் சமீபத்தில் இங்கு பெரிய போட்டிகள் நடைபெறுவதில்லை. இருப்பினும் நீண்ட நாட்களுக்குப்பின் இங்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் செம்மண்ணைப் பயன்படுத்தி பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளது.

Pitch

எனவே நல்ல பவுண்ஸ் இருக்கும் என்பதால் இந்த மைதானத்திலும் பேட்டிங் மற்றும் பவுலின் ஆகிய இரண்டுக்கும் சம அளவிலான போட்டியை பார்க்க முடியும் என அதன் பராமரிப்பாளர் மற்றும் பிசிசிஐ தலைமை மைதான பராமரிப்பாளர் தபோஷ் சாட்டர்ஜி கூறியுள்ளார்.

3. ப்ராபோர்ன் மைதானம்: மும்பையில் உள்ள மற்றொரு பிரபல கிரிக்கெட் மைதானமான ப்ராபோர்ன் மைதானத்திலும் இம்முறை நீண்ட நாட்கள் கழித்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகிறது. எனவே இந்த மைதானமும் செம்மண்ணை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என அதன் பராமரிப்பாளர் பிரகாஷ் அதவளே தெரிவித்துள்ளார். இதனால் இந்த மைதானத்திலும் நல்ல பவுன்ஸ் இருக்கும் என்பதால் பந்து நன்றாக பேட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இங்கும் ஐபிஎல் போட்டிகளின் போது பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த மைதானம் இயற்கையாகவே சுழல் பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என அதன் பராமரிப்பாளர் கூறியுள்ளார்.

4. எம்சிஏ மைதானம்: புனே நகரில் இருக்கும் மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் எம்சிஏ மைதானம் என அழைக்கப்படுகிறது. மும்பையில் உள்ள டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தின் பராமரிப்பாளராக இருக்கும் தபோஷ் சேட்டர்ஜி தான் இந்த மைதானத்தையும் பராமரித்து வருகிறார். இருப்பினும் இங்கு பிரத்யேகமான கருப்பு நிற களிமண்ணை பயன்படுத்தி பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மைதானம் மற்ற மைதானங்களை விட அளவில் சிறியது என்பதால் மும்பையில் இருக்கும் மைதானங்களை விட இங்கு அதிகப்படியான சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் விளாசப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே இங்கு பந்து வீச்சாளர்களின் நிலைமை சற்று படாதபாடாக இருக்கும் எனவும் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்துவார்கள் எனவும் கணிக்கப் படுகிறது.

Advertisement