
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ட்வயன் ப்ராவோ அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். கடந்த 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்திய அவர் 2012 டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் வெல்ல முக்கிய பங்காற்றினார். நாளடைவில் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடிய அவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி தலைமையில் நீண்ட காலம் விளையாடினார்.
அந்த வாய்ப்பில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்ட அவர் சென்னை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அத்துடன் சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இப்போதும் பிராவோ சாதனை படைத்துள்ளார். குறிப்பாக விக்கெட்டுகள் எடுத்த பின் மைதானத்திலேயே அவர் வெளிப்படுத்தும் சிறிய நடனத்திற்கு சென்னையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அப்படிப்பட்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின் சிஎஸ்கே அணிகள் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அந்த சூழ்நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்து விலகியுள்ள பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது என்று சொல்லலாம்.
மேலும் அனுபவமிக்க ப்ராவோவை தவற விட்டதால் சென்னை கிரிக்கெட் அணி மீது சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். இந்நிலையில் தமக்கு கடந்த பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் ஆதரவு கொடுத்த சிஎஸ்கே அணி மற்றும் ரசிகர்களுக்கு பிராவோ நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக சிஎஸ்கே ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருக்கும் ஒப்பந்தத்தை நான் ஏற்றுக்கொண்டது தற்போது செய்திகளாக வெளியாகி இருப்பது ரகசியமல்ல. நான் உண்மையிலேயே விரும்பும் ஒன்றை செய்ய எனக்கு ஆசிர்வாதங்களை வழங்கிய சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்க இந்த நேரத்தை ஒதுக்க விரும்புகிறேன். சென்னை மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள சிஎஸ்கே ரசிகர்களிடமும் ஆசீர்வாதத்தை கேட்கிறேன்”
இதையும் படிங்க: ஃபேப் 4 பேட்ஸ்மேன்களின் விராட் கோலி தான் பெஸ்ட்.. பின்தங்கவும் இதான் காரணம்.. பார்த்திவ் படேல் பேட்டி
“எப்போதும் எனக்கு ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் கொடுங்கள். இது உங்களுக்கு சோகமான தருணமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் நான் செய்யும் எல்லாவற்றிலும் தொடர்ந்து என்னை ஆசீர்வதிக்குமாறு உங்களை இங்கே கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் நிறைய அன்பு, மஞ்சள். விரைவில் மறுபக்கத்திலிருந்து சந்திப்போம் நண்பர்களே” என்று கூறியுள்ளார்.