சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை சென்னை அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வந்தார். அதன் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். பிராவோவுக்கு என சென்னையில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
எனக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு வேண்டும் :
அந்த அளவிற்கு சென்னை ரசிகர்களின் மதிப்பைப் பெற்ற பிராவோ பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என மூன்று வகையான துறைகளிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடனத்தை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றாலும் அது மிகையல்ல. இந்நிலையில் கரீபியன் லீக் தொடரில் விளையாடிய பிராவோ தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் அவர் ஓய்வை அறிவித்த சில நிமிடங்களிலேயே கொல்கத்தா அணியின் மென்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தற்போது சென்னை அணியில் இருந்து அவர் விலகி உள்ளார். இந்நிலையில் சென்னை அணியில் இருந்து விலகியது குறித்தும் புதிதாக கொல்கத்தா அணியின் மென்டராக பதவி ஏற்பது குறித்தும் பேசியுள்ள பிராவோ கூறுகையில் :
சென்னை அணியை விட்டு விலகுவது என்பது ரகசியம் ஒன்றும் கிடையாது. நான் தற்போது கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம் பெற ஒப்புக்கொண்டு விட்டேன். இந்த தருணத்தில் சிஎஸ்கே நிர்வாகமும் என்னை பிடித்த விஷயங்களை மேற்கொள்ள அனுமதி அளித்ததில் மகிழ்ச்சி. சிஎஸ்கே நிர்வாகத்திற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று சென்னை அணியை விட்டு விலகுவது கஷ்டமாக இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டு காலமாக ரசிகர்கள் என் மீது வைத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் எப்போதும் உண்மையுள்ளவனாகவே இருப்பேன். நிச்சயமாக சென்னை அணியை விட்டுச் செல்வது உங்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் என்று எனக்கு தெரியும்.
இதையும் படிங்க : வங்கதேசம் 233 ஆல் அவுட்.. இம்ரான் கான், கபில் தேவ் சாதனையை உடைத்த ஜடேஜா.. 3 புதிய சாதனை
ஆனால் நான் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் உங்களுடைய ஆதரவு எப்போதும் வேண்டும் என்று நம்புகிறேன். சென்னை ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன. எப்போதுமே மஞ்சள் நிறம் தான் என் மனதில் நிற்கும் உங்களை எதிர் திசையில் இருந்து விரைவில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என பிராவோ கூறியது குறிப்பிடத்தக்கது.