வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் முதல் நாள் முடிவில் வங்கதேசம் 107-3 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 2 நாட்கள் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று துவங்கியது.
அதில் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணிக்கு மோனிமுல் ஹைக் அபாரமாக பேட்டிங் செய்து சதமடித்து 107* ரன்கள் குவித்து அசத்தினார். ஆனால் எதிர்புறம் ரஹீம் 13, ஷாகிப் அல் ஹசன் 9, லிட்டன் தாஸ் 13, மெஹதி ஹசன் 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் முடிந்தளவுக்கு போராடியும் வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
300வது விக்கெட்:
இந்திய அணிக்கு பும்ரா 3, அஸ்வின், ஆகாஷ் தீப், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா கடைசி விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா 74 போட்டிகளில் 3006 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் எடுத்த 7வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்தார்.
மேலும் அஸ்வின் (54), அனில் கும்ப்ளே (66), ஹர்பஜன் சிங் (72) ஆகியோருக்கு பின் அதிவேகமாக 300 விக்கெட்டுகள் எடுத்த 4வது இந்திய வீரர் (74 போட்டிகள்) என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றார். இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய இடதுகை சுழல் பந்து வீச்சாளர் என்ற தனித்துவமான சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். அஸ்வின், கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் வலது கை சுழல் பந்து வீச்சாளர்கள் ஆவார்கள்.
ஜடேஜா அபாரம்:
இவை அனைத்தையும் விட பேட்டிங்கில் ஜடேஜா ஏற்கனவே 74 போட்டிகளில் 3122 ரன்களை எடுத்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் மற்றும் ஆசிய வீரர் என்ற ஜாம்பவான்கள் கபில் தேவ் மற்றும் இம்ரான் கான் ஆகியோரின் சாதனைகளையும் உடைத்து ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த டிம் சவுதி – விவரம் இதோ
ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிவேகமாக 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையும் ஜடேஜா படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. இயன் போத்தம்: 72 போட்டிகள்
2. ரவீந்திர ஜடேஜா: 74* போட்டிகள்
3. இம்ரான் கான்: 75 போட்டிகள்
4. கபில் தேவ்: 83 போட்டிகள்
5. ரிச்சர்ட் ஹாட்லி: 83 போட்டிகள்
6. ஷான் பொல்லாக்: 87 போட்டிகள்
7. ரவிச்சந்திரன் அஸ்வின்: 88 போட்டிகள்



