ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி 39வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தாவை அதனுடைய சொந்த மண்ணில் 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் 6வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 5வது தோல்வியை சந்தித்த கொல்கத்தா 7வது இடத்திற்கு சரிந்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 199 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக கேப்டன் கில் 90, சாய் சுதர்சன் 52, ஜோஸ் பட்லர் 41* ரன்கள் எடுத்தார்கள். அதைத் துரத்திய கொல்கத்தா தடுமாற்றமாக பேட்டிங் செய்து 159/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு குர்பாஸ் 1, சுனில் நரைன் 17, வெங்கடேஷ் ஐயர் 14, ரிங்கு சிங் 17, ஆண்ட்ரே ரசல் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
ரசல் என்ன செய்வார்:
அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்துப் போராடிய கேப்டன் ரகானே தங்களுடைய பேட்ஸ்மேன்கள் பயமின்றி தைரியமாக விளையாட வேண்டும் என்று போட்டியின் முடிவில் சாடினார். குறிப்பாக துவக்க வீரர்கள் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தைரியமாக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் நரைன், ரஹானே, குர்பாஸ் போன்ற தங்களுடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிப்பதில்லை என்று கொல்கத்தா அணியின் பௌலிங் பயிற்சியாளர் ட்வயன் ப்ராவோ கூறியுள்ளார்.
அப்படி டாப் ஆர்டர் அசத்தவில்லையெனில் ரசல் தனியாளாக ஃபினிஷிங் செய்து போட்டியை வென்றுக் கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி பிராவோ பேசியது பின்வருமாறு. “ரசல் மிகவும் அனுபவமிக்க வெற்றிகரமான பிளேயர். ஆம் சில போட்டிகளில் லெக் ஸ்பின்னர்கள் அவரை அவுட் செய்தார்கள். ஆனால் ஒரு அணியாக நாம் நன்றாக பேட்டிங் செய்ததாக எனக்குத் தெரியவில்லை”
ப்ராவோ பதில்:
“அதுவே எதார்த்தமாகும். ரசல் மட்டும் தடுமாறவில்லை. நாம் நன்றாக தயாராக வேண்டும். ஐபிஎல் மிகவும் கடினமான தொடர். அதில் நீங்கள் நன்றாக துவங்கவில்லையெனில் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய தன்னம்பிக்கையை இழக்கும் நேரங்கள் வரும். குஜராத்தின் ரசித் கான் போல அனைத்து அணிகளும் தரமான ஸ்பின்னர்களைக் கொண்டிருக்கவில்லை”
இதையும் படிங்க: இந்த பிளான் போட்டு ரசலை அவுட்டாக்கினோம்.. நம்பர் 1 ரசித் கானை சந்தேகப்படாதீங்க.. சாய் கிசோர் பதிலடி
“இன்று அவருக்கு எதிராக ரசல் அவுட்டானார். ஆனால் ரசல் பேட்டிங் செய்ய வரும் போது ஒவ்வொரு முறையும் 14 – 15 ரன்ரேட் தேவைப்படுகிறது. வெற்றிக்கு டாப் ஆர்டரில் வேலை செய்வது முக்கியம். அங்கே விளையாடுபவர்கள் ரசல் ஃபினிஷிங் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். லெக் ஸ்பின்னர்களிடம் ரசல் சிலமுறை விக்கெட்டை இழந்தாலும் அது கவலைக்குரிய விஷயமாக நான் கருதவில்லை. எங்களுடைய ஃபினிஷர்கள் போட்டியை முடிப்பதற்கு டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படுவது அவசியம்” என்று கூறினார்.



