IPL 2023 : தோனி முன்கூட்டியே பேட்டிங் செய்ய களமிறங்காதது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ட்வயன் ப்ராவோ பதில் இதோ

Bravo
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 7 போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த போதிலும் ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 8வது போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 202/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யசஎஸ்வி ஜெய்ஸ்வால் 77 (43) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Zampa

- Advertisement -

அதை தொடர்ந்து 203 ரன்களை துரத்திய சென்னைக்கு டேவோன் கான்வே 8 (16) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்த நிலையில் ருதுராஜ் கைக்வாட் 47 (29) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரகானே 15, ராயுடு 0 என முக்கிய வீரர்கள் ஒரே ஓவரில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியதால் சிவம் துபே 52 (33) மொய்ன் அலி 23 (12) ஜடேஜா 23* (15) ரன்கள் மட்டுமே எடுத்தும் ஃபினிஷிங் செய்ய முடியாமல் 20 ஓவர்களில் 170/6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை பரிதாபமாக தோற்றது. சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ப்ராவோ பதில்:
முன்னதாக இந்தப் போட்டியில் 73/4 என திண்டாடிய சென்னையை சிவம் துபேவுடன் இணைந்து போராடிய மொய்ன் அலி அதிரடியாக விளையாடி அவுட்டானதும் தோனி களமிறங்கி போராடியிருந்தால் வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருப்பார் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த சீசனில் ஆரம்பம் முதலே தடுமாறும் ஜடேஜா இந்த போட்டியிலும் 4* (5) என தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி வெற்றி பறிபோன பின்பு தான் 3 பவுண்டரிகளை அடித்தார். மறுபுறம் இந்த சீசனில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடும் தோனி லக்னோவுக்கு எதிரான போட்டியில் 2 பந்தில் 2 சிக்சர் அடித்தது மட்டுமல்லாமல் இதே ராஜஸ்தானுக்கு எதிராக கடைசி பந்து வரை பயத்தை கொடுக்கும் வகையில் போராடினார்.

Dhoni

அதனால் கடைசி சீசனில் விளையாடுகிறார் என்று கருதப்படும் அவரது ஆட்டத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஆரம்பம் முதலே 4, 5 போன்ற இடங்களில் விளையாடுமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் சற்று முன்கூட்டியே களமிறங்கியிருந்தால் நிச்சயமாக சென்னை போராடி வென்றிருக்கும் என்று நிறைய ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் துபே, ராயுடு, ஜடேஜா போன்ற முழு நேர பேட்ஸ்மேன்கள் 5, 6, 7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்வது ஏற்கனவே திட்டமிடப்பட்டது போல் இந்த சீசனில் தோனி 8வது இடத்தில் களமிறங்கி ஃபினிஷிங் செய்யும் வேலையை மட்டும் செய்வதற்கு திட்டமிடப்பட்ட காரணத்தாலேயே முன்கூட்டியே களமிறங்கவில்லை என்று பவுலிங் பயிற்சியாளர் ட்வயன் ப்ராவோ கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஏற்கனவே முழங்கால் வலியால் கடந்த போட்டிகளில் டபுள் எடுக்க முடியாமல் தடுமாறிய தோனி இதர வீரர்களுக்கு வாய்ப்பளித்து பினிஷிங் செய்யும் வகையில் மட்டும் பேட்டிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியதற்கு பின்வருமாறு. “இந்த இடத்தில் தான் அவர் பேட்டிங் செய்ய வேண்டும். இதர வீரர்கள் அனைவரும் மேல் வரிசையில் விளையாடுவதால் அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு லோயர் ஆர்டரில் விளையாடுகிறார். குறிப்பாக ஜடேஜா, ராயுடு, துபே ஆகியோர் முன்கூட்டியே களமிறங்கி அதிக வாய்ப்பு பெறுவதை அவர் விரும்புகிறார். அத்துடன் பினிஷிங் செய்யும் வேலையை மட்டும் செய்வதில் அவர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்”

Bravo

இதையும் படிங்க:PAK vs NZ : நியூஸிலாந்தை போராடி வென்ற பாகிஸ்தான் – ஆஸி, இந்தியாவின் உலக சாதனையை சமன் செய்து அசத்தல்

“மேலும் சிஎஸ்கே வலுவான மனநிலையை கொண்ட அணி என்பதால் இது போன்ற தோல்விகள் எங்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குறிப்பாக சிறப்பாக செயல்படுகிறோமா இல்லையா என்பதை தாண்டி நாங்கள் தொடர்ந்து ஒரு அணியாக செயல்பட்டு வருகிறோம். ஆனால் வெற்றி கிடைக்கும் போது நாங்களும் மகிழ்ச்சியுடன் செயல்படுவோம். இந்த சீசனில் இதுவரை நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். நாங்கள் அந்த வெற்றி நடையை தொடர விரும்புகிறோம்” என்று கூறினார்.

Advertisement