இந்திய அணிக்கு முழுநேர பயிற்சியாளராக மாறுவீர்களா ? – டிராவிட் அளித்த பதில் என்ன தெரியுமா ?

Dravid
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட அங்கு பயணித்துள்ளது. இந்த அணிக்கு ரவிசாஸ்திரி பயிற்சியாளராக சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது இலங்கை பயணித்த இந்திய அணியில் தவான் கேப்டனாகவும், ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும் சென்றிருந்தனர். நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியும், டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன.

dravid

- Advertisement -

இந்நிலையில் ரவி சாஸ்திரியின் பதவி காலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் உடன் முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர் டிராவிட் முழுநேர பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என்ற ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவி குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் பயிற்சியாளராக மிகவும் மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருகிறேன். இருப்பினும் நான் அடுத்து நடக்கப்போவதை நினைத்து யோசிப்பது இல்லை. தற்போதைக்கு நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இலங்கை தொடரில் நான் இந்திய அணிக்கு பயிற்சி அளித்த அனுபவம் மகிழ்ச்சியான ஒன்று.

dravid 1

இளம் வீரர்களுடன் அணியின் பயிற்சியாளராக செயல்படுவது சிறப்பான ஒன்று. இந்த தொடரில் நான் பயிற்சியாளராக செயல்பட்டாலும் முழுநேர பயிற்சியாளராக செயல்படும் போது ஏகப்பட்ட சவால்கள் இருக்கும். அதனால் நான் முழுநேர பயிற்சியாளராக செயல்படுவேனா என்று கேட்டால் எனக்குத் தெரியவில்லை என்று ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கருத்து மூலம் இந்திய அணிக்கு முழு நேர பயிற்சியாளர் ஆக செயல்பட அவர் இன்னும் முழு அளவில் தயாராகவில்லை என்றே தெரிகிறது.

ஏற்கனவே இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கு பயிற்சி அளித்த டிராவிட் அதிலிருந்து பல திறமையான இளம் வீரர்களை இந்திய அணிக்கு வழங்கியுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் செயல்பட்ட பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement