தோத்தா மட்டும் டிராவிட்டை திட்டுறீங்க.. ஆனா முதல் கப் ஜெயிச்சதுக்கு யாருமே பாராட்டலயே – முன்னாள் வீரர் வேதனை பதிவு

Rahul Dravid
Advertisement

ஆசிய கண்டத்தின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட 2023 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அதன் வாயிலாக ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக மகுடம் சூடிய இந்தியா விரைவில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் ஆசிய சாம்பியனாக சொந்த மண்ணில் கெத்தாக களமிறங்க உள்ளது.

முன்னதாக கொழும்புவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கையை அனலாக பந்து வீசிய இந்தியா 50 ரன்களுக்கு சுருட்டி ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. குறிப்பாக ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய முகமது சிராஜ் மொத்தம் 6 விக்கெட்டுகள் சாய்த்து இந்தியாவின் சாதனை வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

பாராட்டப்படாத ராகுல் டிராவிட்:
அதனால் அவரை ஏராளமான ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டி கொண்டாடி வருகின்றனர். அதே போல 2வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற கேப்டன் ரோகித் சர்மாவையும் விராட் கோலி போன்றவர்கள்களையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்யும் அளவுக்கு பாராட்டி வருகிறார்கள். ஆனால் இந்த வெற்றிக்கு பின்னணியில் உதவியாக இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஏனெனில் கடந்த 2021 டி20 உலக கோப்பைக்கு பின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் பெரும்பாலான தொடர்களில் சோதனை என்ற பெயரில் அடிக்கடி மாற்றங்களை செய்து அணியை செட்டிலாக விடாமல் சீர்குலைத்து வருவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் அவரது தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

அதனால் 2023 உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வரும் ஒப்பந்தத்துடன் அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியே சென்றால் போதும் என்று நிறைய ரசிகர்கள் பேசுவதை பார்க்க முடிகிறது. இருப்பினும் ஒரு வீரராக இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் தலைமை பயிற்சியாளராக தோல்விகளை கடந்து இப்போது தான் ஆசிய அணிகள் போன்ற பலதரப்பு அணிகள் பங்கேற்ற ஒரு பெரிய தொடரை வென்றுள்ளார். இருப்பினும் அவருக்கு யாருமே பாராட்டு தெரிவிக்கவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் ட்விட்டரில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.


“ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியா வெற்றி பெறும் தருவாயில் இருக்கிறது. ஆனால் ராகுல் டிராவிட் இன்னும் ட்விட்டரில் மற்றவர்களைப் போல் ட்ரெண்டிங் ஆகவில்லை. இருப்பினும் அணி தோல்வியை சந்திக்கும் போது அதற்கான விமர்சனங்கள் அவரிடம் செல்கின்றன. ஆனால் வெற்றி பெறும் போது அவர் மறக்கப்படுகிறார். இது போன்ற உலகில் தான் நாம் வாழ்கிறோம். எனவே அவருக்காக இந்தியா 2023 உலக கோப்பையை வெல்ல விரும்புகிறேன். அவர் இந்திய கிரிக்கெட்டின் கொண்டாடப்படாத ஹீரோ” என்று கூறியுள்ளார்.

Advertisement